இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை தீவிரமான பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், டெல்லியிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. ஆக்சிஜன், மருத்துவ படுக்கைகள் உள்ளிட்டவற்றுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து கரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அவ்வப்போது தொடர்ந்து நீடிக்கப்பட்டு வந்தது.
இதனால் கரோனா பரவல் படிப்படியாக குறைந்தது. இதனையடுத்து தற்போது டெல்லியில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் இன்று டெல்லியில் 85 பேருக்கு மட்டுமே கரோனா உறுதியானது. இந்த வருடத்தில் டெல்லியில் ஒரேநாளில் பதிவான குறைந்தபட்ச பாதிப்பு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் இன்று மட்டும் 158 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளதாகவும், 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள டெல்லி அரசு, கரோனா உறுதியாகும் சதவீதம் 0.12 ஆக இருப்பதாகவும் கூறியுள்ளது.