கர்நாடகா மாநிலத்தில் நாளை முதல் பொது முடக்கம் நீக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,55,191 ஆக அதிகரித்துள்ள நிலையில், இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28,084 ஆக உயர்ந்துள்ளது. மஹாராஷ்ட்ரா, டெல்லி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள காரணத்தினால் இந்த மாநிலங்களில் ஊரடங்கு விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வரப்படுகிறது. அதேநேரம் பாதிப்பு குறைவாக உள்ள மாநிலங்களில் ஒருசில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஊரடங்கு தளர்வு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா. இதுகுறித்து பேசியுள்ள அவர், "நாளை முதல் பொது முடக்கம் இருக்காது, மக்கள் மீண்டும் வேலைக்கு செல்ல வேண்டும், பொருளாதாரமும் மிக முக்கியமானது. நிலையான பொருளாதாரத்தை பராமரித்துக்கொண்டே நாம் கரோனா வைரஸுடன் போராட வேண்டும். பொது முடக்கம் இதற்கான தீர்வு அல்ல. எனவே, இப்போது உள்ள கட்டுப்பாடுகள், கட்டுப்பாட்டு மண்டலங்களில் மட்டும் நாளை முதல் தொடரும்" எனத் தெரிவித்துள்ளார்.