புதுச்சேரியில் கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சட்டமன்ற வளாகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்த நாராயணசாமி, "புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், மக்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதைத் தவிர்க்கவில்லை. புதுச்சேரி மக்களுக்கு உயிரைப் பற்றி கவலை இல்லை. ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்து மக்கள் காவல்துறையினரிடம் சண்டைப்போட்டு, தகராறில் ஈடுபடுகின்றனர்.
புதுச்சேரி மக்கள் அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வருபவர்களுக்கு ஒரு வருட சிறை தண்டனை அளிக்கப்படும். மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரியில் மக்கள் வெளியே வராமல் தடுப்பதற்குத் தேவைப்பட்டால் துணை ராணுவப் படை உதவி கோரப்படும்.
அடுத்த 3 நாட்களுக்குக் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்படும். அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறந்திருக்கும், 31- ஆம் தேதி வரை மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம்" என்றார்.