நாடாளுமன்றத்துக்கு 2024-ல் தேர்தல் நடக்கவிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 2 வருடங்கள் இருந்தாலும், பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் புதிய கூட்டணியை உருவாக்க இப்போதே அதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ்.
இதே முயற்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இருக்கும் நிலையில், அவரை சமீபத்தில் தொடர்புகொண்டு, “மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளுக்கும் அவர்களின் அரசியலுக்கும் எதிராக நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நாங்கள் ஒத்துழைப்பு தருவோம்” என சொல்லியுள்ளார் சந்திரசேகரராவ்.
இந்த நிலையில், சந்திரசேகரராவை தொடர்பு கொண்டு அவரது முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான தேவகௌடா. இதனைத் தொடர்ந்து, பாஜகவுக்கு எதிரான மாநில முதல்வர்கள் அனைவரிடமும் ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்தி முடித்திருக்கும் சந்திரசேகரராவ், புதிய கூட்டணியை உருவாக்கு முயற்சியின் அடுத்த கட்டமாக தேசிய தலைவர்களையும் மாநில முதல்வர்களையும் சந்தித்து விவாதிக்க இருக்கிறார்.
அதன்படி, முதல் சந்திப்பாக, மகாராஸ்ட்ரா முதல்வரும் சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரேவை வருகிற 20-ந் தேதி சந்தித்து ஆலோசனை நடத்துகிறார் சந்திரசேகரராவ். இதற்கு முன்னதாக, சந்திரசேகரராவை தொடர்பு கொண்டு பேசிய உத்தவ்தாக்கரே, “தேசத்தின் கூட்டாச்சி தத்துவத்தை பாதுகாக்க நீங்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். நீங்கள் மும்பைக்கு வாருங்கள்; விவாதிப்போம்” என்று அழைப்பு விடுத்துள்ளார். இதனையடுத்தே இரண்டு மாநில முதல்வர்களின் முதல் சந்திப்பு 20-ந் தேதி மும்பையில் நடக்கிறது.