நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கும், நீதிபதிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், காசியாபாத் மாவட்டத்தில் நீதிமன்றம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றத்தில் நடந்த வழக்கின் போது, வழக்கறிஞர் ஒருவர் நீதிபதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதத்தை தொடர்ந்து ஏராளமான வழக்கறிஞர்கள் நீதிபதியின் அறையை முற்றுகையிட்டனர். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து நீதிபதி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
தகவல் அறிந்த காவல்துறையினர், அங்கு வந்து வழக்கறிஞர்களிடம் தடியடி நடத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால், போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் போது, நீதிமன்ற அறையிலுள்ள நாற்காலிகள் வீசப்பட்டன. மேலும், பல வழக்கறிஞர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. போலீசார் தடியடி நடத்தியதால் ஆத்திரமடைந்த வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தை அடித்து நொறுக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.