இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
நீட்டிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் 300 கோடி ரூபாயை இலக்காக வைத்து நீட் மோசடியில் ஒரு கும்பல் ஈடுபட்டது தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. நீட் வினாத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்ல போக்குவரத்து ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனங்கள் உதவியுடன் வினாத்தாள்கள் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. 700 மாணவர்களுக்கு நீட் வினாத்தாள் விற்க திட்டமிட்டதாக மோசடி கும்பலைச் சேர்ந்த பிஜேந்தர் குப்தா என்பவர் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாகவே நீட் வினாத்தாள் கசியும் எனப் பிஜேந்தர் குப்தா மார்ச் மாதமே வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ தற்போது வைரலானது. போக்குவரத்தின் போது நீட் வினாத்தாள் பெட்டிகள் எப்படி உடைக்கப்படுகின்றன எப்படி கைமாறுகிறது என்பது பற்றியும் வீடியோவும் வெளியாகியிருந்தது. நீட் வினாத்தாள் கசிவில் அரசு அதிகாரிகள் முதல் அச்சகம் வரை தொடர்பு இருக்கும் எனப் பிஜேந்தர் குப்தா தெரிவித்திருந்தார். உத்திரபிரதேசத்தில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ள பேடி ராம் என்பவரின் உதவியாளராக இருந்த பிஜேந்தர் குப்தா அவருடைய உதவியுடன் இதனைச் செய்தது தெரியவந்துள்ளது. வினாத்தாள் அடங்கிய பெட்டிகளை சாதுரியமாக உடைத்து அவற்றைத் திருடி விற்று வந்தது தெரியவந்துள்ளது.