இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான 31 ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. அந்த வகையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1 ஆம் தேதி மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
அதனைத் தொடர்ந்து நேற்று (05.02.2024) குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். இந்நிலையில் இன்று மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின் போது திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா எம்.பி. பேசுகையில், “தமிழ்நாட்டில் அடுத்தடுத்து 2 பெரிய புயல்கள் தாக்கின. இருப்பினும் தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிவாரண நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. நிவாரண நிதி வழங்குவது தொடர்பாக இதுவரை மத்திய அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை. மாநில பேரிடர் நிவாரண நிதிக்கும், தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கும் எந்த தொடர்பும் இல்லை. மாநில பேரிடர் நிவாரண நிதி என்பது பேரிடரின்போது மாநில அரசு ஒதுக்கும் நிவாரண நிதியாகும். இது அனைத்து மாநிலத்துக்கும் பொதுவானது.
நிவாரண நிதி வழங்குவதில் அனைத்து மாநிலங்களையும் சமமாக நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்குவது போல, அனைத்து மாநிலங்களுக்கு சமமாக வழங்க வேண்டும். தேசிய பேரிடர் நிவாரண நிதியில், அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் சமமான நிவாரண நிதி வழங்கும் நிலையை அளிக்கும் வகையில் புதிய சட்ட விதிகளை வகுக்க வேண்டும். நிதி வழங்குவது தொடர்பாக இதுவரை மத்திய அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை. வெள்ள நிவாரணம் குறித்து கேள்வி எழுப்பினால் மத்திய அமைச்சர்கள் பொறுப்பற்ற முறையில் அலட்சியமாக பதில் அளிக்கின்றனர் ” எனத் தெரிவித்தார்.
அதே போன்று வெள்ள நிவாரணம் கோரி திமுக மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. பேசியபோது மத்திய அமைச்சர்கள் குறுக்கீடு செய்தனர். அதற்கு டி.ஆர். பாலு, “மத்திய அமைச்சராகவும் எம்.பி.யாகவும் இருக்கவே தகுதி இல்லை. மத்திய அமைச்சராக இருந்தாலும் நாடாளுமன்றத்தில் ஒரு ஒழுங்குடன் நடந்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து இரு கட்சி உறுப்பினர்களும் மாறி மாறி முழக்கமிட்டதால் மக்களவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தமிழ்நாட்டிற்கு உரிய வெள்ள நிவராணத்தை வழங்காத மத்திய அரசைக் கண்டித்து மக்களவையில் இருந்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சரை விமர்சித்தது ஏன் என டி.ஆர். பாலு செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்துள்ளார். அப்போது இது குறித்து அவர் பேசுகையில், “தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரணம் வேண்டும் என நானும், ராஜாவும் கேட்டுக்கொண்டிருந்தபோது மத்திய இணையமைச்சர் எல். முருகன் தொடர்ந்து குறுக்கீடு செய்து வந்தார். நான் பேசுவதற்கு தொடர்ந்து இடையூறு செய்ததால் நான் உட்காருங்கள் என்று கூறினேன். வேறு எதுவும் தவறாக கூறவில்லை. நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்களை பேசவிடாமல் பாஜகவினர் தடுத்தனர். இதனால் பாஜகவின் செயல்பாடுகளைக் கண்டித்து இந்திய கூட்டணி எம்.பி.க்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்து விட்டோம்” எனத் தெரிவித்தார்.