கடந்த ஆண்டு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மோடி அரசு ரத்து செய்தபோது, இந்திய வரைபடத்தின் தலைப்பகுதியாக இருக்கும் காஷ்மீர் தீப்பற்றி எரிந்தது. ஊரடங்கு உத்தரவு, செல்போன் சேவை ரத்து, இணைய சேவை துண்டிப்பு, பள்ளிக்கூடம் மூடல் என அந்த மாநிலமே அல்லோலகல்லோலப்பட்டது. தற்போது, அதற்கு சற்றும் குறைவில்லாமல் கொதிநிலையில் இருக்கிறது டெல்லி மாநகரம்.
மத்திய அரசின் சி.ஏ.ஏ. சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி ஷாகின்பாக் பகுதியில் இஸ்லாமிய சமுதாயத்தினர் அறவழிப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பிப். 19-ம் தேதி வாரணாசியில் உரை நிகழ்த்திய மோடி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
இந்நிலையில், பிப். 23-ம் தேதி டெல்லி பஜன்புரா பகுதியில் சிஏஏ ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, சிஏஏ ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, இரு தரப்பினரும் கற்களால் தாக்கிக்கொண்டனர். சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். அதனைத் தொடர்ந்து, போலீஸார் தடியடி நடத்தியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.
நிலைமை மெல்ல கட்டுக்குள் வந்த நிலையில், மறுநாள் பிப். 24-ம் தேதி மீண்டும் போராட்ட களத்தில் வன்முறை ஏற்பட்டது. ரத்தன்லால் என்ற போலீஸ்காரர் கல்வீச்சு சம்பவத்தில் உயிரிழக்க, காவல் துணை ஆணையர் ஒருவர் காயமடைந்தார். இதையடுத்து, லத்திசார்ஜ், கண்ணீர்புகை குண்டுகளை வீசி கலவரக்கும்பலை விரட்டி அடித்தது டெல்லி போலீஸ். சேதி கேட்டு அகமதாபாத்தில் இருந்து டெல்லி விரைந்தார் பிரதமர் நரேந்திரமோடி.
இதற்கிடையே அகமதாபாத் - ஆக்ரா பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்க அதிபர் டிரம்பும் டெல்லி வந்து சேர்ந்ததால், ஒரு வித பரபரப்பு தொற்றிக் கொண்டது. பிப். 25-ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்பு, காந்தி சமாதியில் அஞ்சலி, ஐதராபாத் இல்லத்தில் மோடியுடன் முக்கிய பேச்சுவார்த்தை, தொழில் துறையினருடன் ஆலோசனை என ‘ஷெட்யூல்’ பிரகாரம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மறுபுறம், வடகிழக்கு டெல்லியான கர்தாம்பூரி, ஜாப்ராபாத், சாந்த் பாக், மாஜ்பூர், ஷீலாம்பூர் பகுதிகள் கலவரக்காடாக மாறின. வாகனங்களுக்கு தீ வைப்பு, பொதுச் சொத்துக்கள் சேதம், வழிபாட்டு மையங்கள் மீது தாக்குதல் என கலவர பூமியாக மாறியது. இதனால் 6 இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
இருப்பினும், அடுத்தடுத்து நிகழ்ந்த உயிரிழப்புகளால் புதன்கிழமை முற்பகல் நிலவரப்படி பலி எண்ணிக்கை 21-ஆக உயர்ந்துவிட்டது. பத்திரிகையாளர்கள், போலீஸ்காரர்கள் உட்பட 150-க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஷீலாம்பூர் காவல் துணை ஆணையரிடம் ஆலோசனை நடத்தினார். டெல்லியின் சிறப்பு காவல் ஆணையராக ஸ்ரீவத்சவா நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் எந்த பலனும் இல்லை. இந்த நடவடிக்கைகளுக்குப் பிறகும் 7 பேர் கலவரத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.
பூட்டியிருந்த கடைகளை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை அள்ளிச் சென்ற கலவரக் கும்பல் அதனைப் படம் பிடித்த பத்திரிகையாளர்களையும் விரட்டி விரட்டித் தாக்கியதாக, டெல்லியில் உள்ள பத்திரிகை நண்பர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.
25-ம் தேதி காவல்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். பின்னர் அவரே நிலைமை எல்லை மீறிப்போய்விட்டது. டெல்லி போலீஸால் கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ராணுவத்தை அனுப்பி வையுங்கள்" என்று உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பி வைத்தார்.
ஆனால், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இதுகுறித்து ஒரு வேண்டுகோள்கூட விடுக்கவில்லை. ‘மக்களே! அமைதியாக இருங்கள், வன்முறையில் ஈடுபடாதீர்கள்.’ என்று ஒரு வார்த்தைகூட இந்த நிமிடம் வரை சொல்லவில்லை. உள்துறை அமைச்சர் அமித்ஷா காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதோடு சரி.
இதற்கிடையே, புதன்கிழமை காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி, மன்மோகன்சிங், மாஜி மந்திரிகள் ஏ.கே.அந்தோனி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு, இறந்தவர்களுக்காக அனுதாபம் தெரிவித்து மவுன அஞ்சலி செலுத்தினர். ராகுல்காந்தி ஏனோ ஆப்செண்ட்.
இதற்கிடையே, டெல்லி கலவரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கலவரத்தைக் கட்டுப்படுத்த டெல்லி போலீஸ் தவறிவிட்டதாக நறுக்கென்று தலையில் 'குட்டு' வைத்துள்ளது.