அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டதற்கு பாஜக தலைவர் நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார்.
மும்பை காவல்துறை ரிபப்ளிக் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியின் இல்லத்திற்குள் நுழைந்து இன்று காலை அவரை கைது செய்தது. கட்டிட உள்வடிவமைப்பாளர் ஒருவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டதற்கு இவர்தான் காரணம் என்று தற்கொலை செய்து கொண்டவரின் மகள் அளித்த புகாரின் அடிப்படையில் அர்னாப் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், தனது வீட்டிற்குள் நுழைந்த காவல்துறையினர் தன்னை, தனது மகன் மற்றும் மனைவியை உடல் ரீதியாகத் தாக்கியதாகவும் அர்னாப் கோஸ்வாமி தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. மேலும், ரிபப்ளிக் தொலைக்காட்சியில் வெளிவந்த வீடியோவின் படி, மும்பை போலீஸார் அர்னாப் கோஸ்வாமியை அடித்து முடியைப் பிடித்து இழுத்து வாகனத்தில் ஏற்றியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அர்னாப் கோஸ்வாமி கைது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா, "ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ள விதம், காங்கிரஸ் மற்றும் மகாராஷ்ட்ர அரசாங்கத்தின் மனநிலையை காட்டுகிறது. இது ஜனநாயகம் மற்றும் பத்திரிகை துறையின் கொள்கைகளுக்கு ஏற்பட்ட பெரிய அடியாகும். இதை நான் கண்டிக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.