அமெரிக்காவில் உள்ள போயிங் நிறுவனம் தயாரித்த "அப்பாச்சி கார்டியன் அட்டாக் ஹெலிகாப்டர்கள்" (APACHE GUARDIAN ATTACK HELICOPTER- AH 64 E) இந்திய விமானப் படையிடம் (INDIAN AIR FORCE- IAF) நேற்று ஒப்படைக்கப்பட்டது. முதற்கட்டமாக நான்கு ஹெலிகாப்டர்களை அன்டோனோவ் ஏஎன் 224 ( Antonov AN 224 ) சரக்கு விமானம் மூலம் இந்தியாவிற்கு அனுப்பியது போயிங் நிறுவனம். இந்த விமானம் நேற்று இரவு உத்தரபிரதேசம் மாநிலத்தில் காசியாபாத்தில் உள்ள இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹிண்டன் விமான நிலையத்திற்கு வந்தது. அதன் பிறகு சரக்கு விமானத்தில் இருந்து ஹெலிகாப்டர்கள் ஒவ்வொன்றாக இறக்கப்பட்டு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் விமானதளத்திற்கு கொண்டு செல்லப்படும் என இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக 'போயிங் நிறுவனம்' வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அடுத்த வாரம் மீண்டும் நான்கு "அப்பாச்சி கார்டியன் அட்டாக் ஹெலிகாப்டர்கள்" இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் 2020- ஆம் ஆண்டிற்குள் அனைத்து ஹெலிகாப்டர்களும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என போயிங் நிறுவனம் அதிகாரப்பூர்வாமாக தெரிவித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் அமெரிக்கா அரசிடம் "அப்பாச்சி கார்டியன் அட்டாக் ஹெலிகாப்டர்கள்" 22 வாங்க ஒப்பந்தம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகை ஹெலிகாப்டரில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து பார்ப்போம். AH-64 E வகை ஹெலிகாப்டர் என்பது உலகின் மிக முன்னேறிய மல்டி-ரோல் போர் வகை ஹெலிகாப்டர் ஆகும்.
இதுவரை உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு 2,200 க்கும் மேற்பட்ட அப்பாச்சி ஹெலிகாப்டர்களை வழங்கியுள்ளது போயிங் நிறுவனம். அப்பாச்சி ஹெலிகாப்டர்களை வாங்கும் நாடுகளின் பட்டியலில் 14- வது நாடாக இந்தியா உள்ளது. அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் போர் காலக்கட்டத்தில் பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர் ஆகும். இந்த ஹெலிகாப்டரை அமெரிக்கா ராணுவம் அதிக அளவில் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க விமானப்படை அதிகாரிகளால், இந்திய விமானப்படை அதிகாரிகளுக்கு இரண்டு வருடம் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாகவும், அதன் பிறகே அப்பாச்சி ஹெலிகாப்டரை இயக்க விமானிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான், லிபியா நாடுகளில் போர் சூழல் ஏற்பட்ட காலங்களில் இந்த வகை ஹெலிகாப்டரை அமெரிக்கா ராணுவம் பயன்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.