தனியார் வங்கியில் பணிபுரியும் இளம்பெண் ஒருவர் ஆன்லைனில் பீர் ஆர்டர் செய்ததால் 87,000 ரூபாயை இழந்த சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.
மும்பை அருகிலுள்ள பொவாய் நகரை சேர்ந்த ராதிகா பரேக் தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் வேலை முடிந்து வீடு திரும்பிய இவர் பீர் குடிக்க நினைத்துள்ளார். எனவே வீடுகளுக்கு மதுபானம் டெலிவரி செய்யும் கடையை இணையத்தில் தேடியுள்ளார். அதில் அப்படி ஒரு கடையை அவர் கண்டுபிடித்துள்ளார். அந்த கடையின் தொலைபேசி எண்ணிற்கு போன் செய்து மூன்று பீர்களை ஆர்டர் செய்துள்ளார்.
அவர்கள் பீருக்கான பணத்தை முன்கூட்டியே செலுத்தினால் மட்டுமே பீர் அனுப்ப முடியும் என தெரிவித்துள்ளனர். கூகுள் பே செயலி மூலம் இந்த பணத்தை தாங்கள் செலுத்தலாம் என்று கூறிய ஊழியர் ராதிகாவின் யூபிஐ (UPI) எண்ணை கேட்டிருக்கிறார். சிறிது நேரத்தில் ராதிகாவிற்கு payment request வந்துள்ளது. அவரை அதனை ஏற்றதும் அவரது வங்கி கணக்கிலிருந்து ரூ. 29,001 எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக அந்த கடை எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார்.
மறுமுனையில் பேசிய அந்த நபர், தொகை தவறுதலாக எடுக்கப்பட்டதாகவும், சிறிது நேரத்தில் மீண்டும் அந்த தொகை திரும்ப அனுப்பப்படும் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பிய ராதிகா காத்திருந்துள்ளார். ஆனால் சிறிது நேரத்தில் அவரது வங்கிக் கணக்கிலிருந்து மேலும் 58,000 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மீண்டும் அந்த எண்ணிற்கு கால் செய்துள்ளார். ஆனால் அந்த எண்ணை தொடர்புகொள்ள முடியவில்லை. 3 பீருக்கு 87,000 ரூபாயை இழந்த இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.