நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் வரும் 22 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நாள் நிகழ்வுகள் வழக்கம்போல் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. இதனையடுத்து இன்று முதல் (19.9.2022) முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ள சிறப்பு கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று புதிய நாடாளுமன்றத்தில் முதல் அமர்வு நடைபெற உள்ளது.
இந்நிலையில் பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு விடை கொடுக்கும் வகையில் பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு முன்பு மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் மக்களவை உறுப்பினர்கள் 750 பேர் தனித்தனியாகவும் குழுவாகவும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லீகார்ஜூன கார்கே, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது பாஜக எம்.பி.நர்க்ஹாரி மயங்கி விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வை தொடர்ந்து பிரதமர் மோடியுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய நாடாளுமன்றத்திற்குள் செல்ல உள்ளனர். இதையடுத்து புதிய நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தங்கர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்ற உள்ளனர்.