மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதுபோல தேர்தல் அறிக்கைகளும் அனைத்து கட்சிகளும் வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் பாஜக வின் சுமித்ரா மகாஜன் (75) தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளார். கடந்த 1989ம் ஆண்டு முதல் 8 முறை இந்தூர் தொகுதியில் இருந்து எம்.பி ஆக தேர்வு செய்யப்பட்ட சுமித்ரா தற்போது இந்த முடிவை அறிவித்துள்ளார். 75 வயதினை கடந்தவர்கள் போட்டியிட வாய்ப்பில்லை என்ற முறையை பாஜக கடைபிடித்து வருவதால், அதனை அடிப்படையாக கொண்டு இவ்வாறு அறிவித்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கடிதம் ஒன்றினையும் வெளியிட்டுள்ளார்.
அந்தக் கடிதத்தில், "என்னுடைய நிலைப்பாட்டை நான் கட்சிக்கு தெளிவாக கூறியிருந்தேன். வயது வரம்பு கொள்கையை நடைமுறைப்படுத்த கட்சி நினைக்கிறது என்பது எனக்கு நன்றாக தெரியும். இருப்பினும், என்னுடைய தொகுதியில் நான் போட்டியிட விரும்பவில்லை என கூறியும், வேறுஒரு வேட்பாளரை நிறுத்த கட்சி தயங்குகிறது. இதற்கு மேல் செய்வதற்கு ஒன்றுமில்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.