Skip to main content

சாதுக்களுக்கு பிரதமர் செய்த ஃபோன் கால்... கும்பமேளா நடத்துவதில் ஏற்பட்டுள்ள குழப்பம்...

Published on 17/04/2021 | Edited on 17/04/2021

 

modi talks to sadhus in hospital on phone

 

உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவாரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் 'மகா கும்பமேளா' கடந்த ஏப்ரல் 1- ஆம் தேதி தொடங்கியது. வரும் 30 ஆம் தேதி வரை இது நடைபெற உள்ளது. இந்தியா முழுவதும் கரோனா இரண்டாவது அலை உச்சத்தை அடைந்துள்ள நிலையில், கும்பமேளா காரணமாக இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரிக்கும் என மருத்துவர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில், ஹரித்துவார் கும்பமேளாவில் கடந்த வாரத்தில் 43 லட்சம் பக்தர்கள் வந்து புனித நீராடியதாக, உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது. 

 

மேலும், கும்பமேளாவுக்கு வந்தவர்களிடையே நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் முதல் கட்டமாக 2,171 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் பலருக்கு அறிகுறிகள் இருப்பதால் பாதிப்பு எண்ணிக்கை உயரலாம் என்ற அச்சமும் அம்மாநிலத்தில் நிலவிவருகிறது. இந்நிலையில், கும்பமேளாவை நடத்தும் அகாதாக்களின் அமைப்பான மத்தியப் பிரதேச மகா நிர்வானி அஹாராவின் தலைவர் சுவாமி கபில் தேவ் கரோனாவால் பாதிக்கப்பட்டுக் கடந்த 13-ம் தேதி உயிரிழந்தார். இந்த விவகாரம் அகாதாக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அகாதாக்களின் அமைப்பான நிரஞ்சனி அகாதா மற்றும் ஆனந்த் அகாதா ஆகியவை இன்றுடன் (ஏப்ரல் 17) கும்பமேளாவை முடித்துக்கொள்வதாக திடீரென நேற்று அறிவித்தன. 

 

ஆனால், பைராகி, திகம்பர், நிர்வாணி மற்றும் நிர்மோஹி ஆகிய அகாதாக்கள் இந்த இரு அகாதாக்களின் முடிவுக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும், கும்பமேளாவை முடிப்பது குறித்து முடிவு செய்ய அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளன. கும்பமேளாவை நடத்தும் குழுக்களுக்கு மத்தியில் இப்படி குழப்பம் ஏற்பட்டுள்ள சூழலில், இதில் தலையிட அம்மாநில அரசும் மறுப்பு தெரிவித்துவிட்ட சூழலில், கும்பமேளா நடத்துவதில் இதனால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

 

அதுமட்டுமல்லாமல் கும்பமேளாவுக்கு வந்த சாதுக்களில் 30 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும், ஜூனா அகாராவின் சுவாமி ஆவ்தேஷ்னாந்த கிரி, ஆச்சார்யா மஹாமண்டலேஸ்வர் ஆகியோர் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி இன்று உடல் நலம் விசாரித்தார்.

 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "நான் இன்று ஜூனா அகாராவின் சுவாமி ஆவ்தேஷ்னாந்த கிரியுடன் தொலைப்பேசியில் பேசி அவரின் உடல்நலத்தையும், கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் மற்ற சாதுக்களின் உடல்நலன் குறித்தும் விசாரித்தேன். உள்ளாட்சி நிர்வாகத்துக்கு கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான ஒத்துழைப்பை அனைத்து சாதுக்களும் அளித்து வருகிறார்கள். இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்தேன்.

 

இரு சஹி புனித நீராடல்கள் நடக்க உள்ளன. கரோனாவுக்கு எதிராகத் தேசம் நடத்திவரும் போரில், அடையாளமாகக் கும்பமேளா இருக்க வேண்டும். இந்த போருக்கு ஊக்கம் தருவதாகக் கும்பமேளா இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

 

பிரதமர் மோடியிடம் பேசியது குறித்து ஜூனா அகாராவின் சுவாமி ஆவ்தேஷ்னாந்த கிரியின் கருத்தில், "பிரதமர் மோடி என்னிடம் பேசினார். அவரின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும். ஒவ்வொருவரும் மற்றவர்களின் உயிரைக் காப்பது புனிதமானது. கும்பமேளாவுக்கு வரும் 27ம் தேதி சஹி புனித நீராடலுக்கு மக்கள் யாரும் கூட்டமாக வர வேண்டாம்" எனக் கூறியுள்ளார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ராமர் கோவில் திறப்பு விழா; உத்தரகாண்ட் அரசு உத்தரவு

Published on 13/01/2024 | Edited on 13/01/2024
Inauguration of Ram Temple; Uttarakhand Govt

உத்தரப் பிரதேசத்தில் உள்ள  அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்தக் கோயில் இம்மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், கோயில் அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் மொத்தம் 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. 

அதேபோல், ராமர் கோயில் அமைவதற்கு ஆதரவாக இருந்த பத்திரிகையாளர்களுக்கும், ராமர் கோயிலுக்காகப் பாடுபட்ட 50 கரசேவகர்களின் குடும்பத்தினருக்கும், குறைந்தபட்சம் 50 நாடுகளில் இருந்து தலா ஒரு பிரதிநிதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விழாவில் பங்கேற்க இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 7,000க்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி, உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் பல்வேறு ஏற்பாடுகளை அரசு செய்து வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், அயோத்தியில் மூலவர் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் ஜனவரி 22ம் தேதி மாநிலத்தின் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும், அன்றைய தினத்தில் மதுபானக் கடைகள் மாநிலத்தில் திறக்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து, ஜனவரி 22ஆம் தேதி கங்கை நதியின் 84 படித்துறைகளிலும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இலவசமாக படகு சவாரி வழங்கப்படும் என அங்குள்ள படகோட்டும் தொழிலாளர்கள் அறிவித்திருந்தனர். 

இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி உத்தரகாண்ட் மாநிலத்தில் வரும் ஜனவரி 22ஆம் தேதி மதுபான கடைகள் அனைத்தும் மூடப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அதில், மாநிலத்தில் உள்ள மதுபான கடைகள், பார்கள் அனைத்தும் 22ஆம் தேதி மூடப்பட வேண்டும் என்று உத்தரகாண்ட் அரசு கூறியுள்ளது. மேலும், தடையை மீறி கடைகளை திறந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“பெரிய ஆறுதலைத் தருகிறது” - கமல்ஹாசன் பாராட்டு

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

kamalhassan about uttarakhand tunnel issue

 

உத்ரகாண்ட் மாநிலத்தில் சுரங்கத்திற்குள் ஏற்பட்ட சரிவில்  41 தொழிலாளர்கள் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை மீட்க அரசு தீவிர முயற்சிகள் செய்தது. மேலும் பல்வேறு தொழில்நுட்ப உபகரணங்கள் மூலமாக சரிவு ஏற்பட்ட இடத்தில் துளையிட்ட நிலையில் அங்கு மேலும் சரிவு ஏற்பட்டது. பின்பு 3வது முயற்சியில் வெற்றிகரமாகத் துளையிட்டு ஆக்சிஜன், உணவு வழங்கப்பட்டது. அடுத்து எலி வளை தொழிலாளர்களின் முயற்சியில் குழி தோண்டி சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 பேரையும் மீட்கும் பணி தீவிரமாக நடந்தது. 17 நாட்கள் பெரும் போராட்டத்துக்குப் பிறகு சுரங்கத்தில் சிக்கிய அனைவரும் மீட்கப்பட்டனர்.

 

இந்த மீட்புக் குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர்களும் ஈடுபட்டிருந்தனர். 41 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டதையடுத்து அந்த மகிழ்சியைப் பலரும் கொண்டாடினர். மேலும் மீட்கப்பட்டவர்களை மாலை அணிவித்து வரவேற்றனர். இந்த நிலையில் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அதிகாரிகளை, தமிழக முதல்வர் மற்றும் புதுச்சேரி முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் எனப் பலரும் பாராட்டி வருகின்றனர். 

 

அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், “உத்தரகாசியில் சுரங்கத் தொழிலாளர்கள் நாற்பத்தொரு பேரும் தீங்கில்லாமல் மீட்கப்பட்டது பெரிய ஆறுதலைத் தருகிறது. கடுமையான சவால்கள், பின்னடைவுகள் ஏற்பட்டபோதும் சளைக்காமல் தீரத்துடன் போராடி உயிர்களைக் காத்த மீட்புக் குழுவினரும், அவர்களுக்கு உதவிய எலி வளை சுரங்கத் தொழிலாளர்களும் போற்றுதலுக்குரியவர்கள். சுரங்கத்தில் மாட்டிக்கொண்ட தொழிலாளர்களும் மனத்திடத்தோடு காத்திருந்தது பாராட்டத் தக்கது. 

 

17 நாட்கள் தொடர்ந்த இந்தப் போராட்டத்தில் உயிர்களைக் காக்கும் முயற்சியில் ஈடுபட்ட அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த பாராட்டு. மீட்கப்பட்டவர்களின் குடும்பத்தினரோடு எனது மகிழ்வைப் பகிர்ந்து கொள்கிறேன்” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.