உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த சூழலில் கடந்த 12 ஆம் தேதி (12/11/2023) காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாகச் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் சுரங்கத்தின் உள்ளே சிக்கினர். சுமார் 4.5 கி.மீ. நீளமுள்ள சுரங்கப் பாதையில் 150 மீட்டர் இடிந்து விழுந்து இந்த விபத்து நிகழ்ந்தது.
மீட்புப் பணிகளில் 10வது நாளாகத் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் இதுவரை உயிரிழப்பு ஏதும் இல்லை எனக் கூறப்படுகிறது. அதே சமயம் சரிந்து விழுந்த பாறைகளைச் சிறிதளவு அகற்றிவிட்டுக் குழாய்கள் மூலம் சுரங்கத்தில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் திரவ உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றது என்று தகவல்கள் வெளியாகி இருந்தன.
அதனைத் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியவர்களுக்கு முதல் முறையாகச் சூடான உணவு வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. அதன்படி, அங்கு சிக்கியுள்ள 41 தொழிலாளர்களுக்கு கிச்சடி, டால் உள்ளிட்ட உணவு வகைகள் தரப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் சுரங்கப் பாதை விபத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களின் வீடியோ வெளியாகியுள்ளது. வாக்கி டாக்கி மூலம் தொழிலாளர்களுடன் மீட்புக் குழுவினர் பேசும் காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதில், “சுரங்கப் பாதைக்குள் சிக்கி 10 நாட்கள் ஆகிவிட்டதால் தங்கள் நிலைமை மோசமாகிவிட்டது. எனவே தங்களை உடனடியாக மீட்க வேண்டும்” என விபத்தில் சிக்கிய தொழிலாளர்கள் தங்களது வேதனையைத் தெரிவித்துள்ளனர். மருத்துவ சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் கேமரா மூலம் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.