இந்த ஆண்டுக்கான ஹோலி கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளப்போவதில்லை என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
சீனாவில் வூகான் மாகாணத்திலிருந்து தொடங்கிய கரோனா வைரஸின் தாக்கம் இன்றும் உலகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது. அண்டார்டிகாவைத் தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், சுமார் 60 நாடுகளில் இதன் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 92,153 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்த காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,127 ஆக உயர்ந்துள்ளது. எனவே பெரும்பாலான நாடுகளில் மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் புதிதாக கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள சூழலில் பொதுமக்கள் பயம் இல்லாமலும், அதேநேரம் கவனத்துடனும் இருக்க வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஹோலி கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளப்போவதில்லை என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதுகுறித்த அவரது ட்வீட்டில், "கோவிட் -19 கரோனா வைரஸ் பரவுவதைத் தவிர்க்கும் விதமாக மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என உலகெங்கிலும் உள்ள வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே, இந்த ஆண்டு எந்த ஹோலி மிலன் நிகழ்ச்சியில் நான் பங்கேற்க வேண்டாம் என முடிவு செய்துள்ளேன்" என தெரிவித்துள்ளார்.