ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையின் கீழ் கூட்டுறவு வங்கிகளைக் கொண்டுவரும் வகையிலான அவசரச் சட்டத்திற்குக் குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
அண்மையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், நாடு முழுவதும் உள்ள 1,482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளும், 58 மாநில கூட்டுறவு வங்கிகளும் ரிசர்வ் வாங்கி மேற்பார்வையின் கீழ் வரும் வகையிலான அவசரச் சட்டம் பிறப்பிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. நாடு முழுவதும் சுமார் 8.5 கோடி பயனாளர்கள் இந்தக் கூட்டுறவு வங்கிகளின் வாயிலாகப் பயன்பெற்று வரும் சூழலில், இதனை ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையில் கொண்டுவருவது மாநில அரசுகளின் உரிமைகளுக்கு எதிரான செயல் என எதிர்ப்புகள் எழுந்தன. இந்நிலையில் இந்த அவசரச் சட்டத்துக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து இன்று அவசரச் சட்டத்தைப் பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்த மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் நேரடிக் கண்காணிப்பில் கொண்டுவரும் அவசரச் சட்டத்துக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த அவசரச் சட்டத்தின் மூலம், முதலீட்டாளர்களின் நலன் பாதுகாக்கப்படும், கூட்டுறவு வங்கிகள் வலுப்படும். நிர்வாகம் மேம்படும், கூட்டுறவுகளின் செயல்திறன் மேம்பட்டு முதலீடும் அதிகரிக்கும். இந்தத் திருத்தங்கள் முதன்மை வேளாண்மைக் கடன் சொசைட்டிக்கு (பி.ஏ.சி.எஸ்.) அல்லது வேளாண் தொழிலுக்கு நீண்டகாலக் கடன் அளிக்கும் கூட்டுறவு சொசைட்டிக்குப் பொருந்தாது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.