அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அறுவை சிகிச்சை நிறைவடைந்தது.
இதற்கு முன்னதாக அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் செய்திருந்த மேல்முறையீட்டில், அமைச்சர் செந்தில் பாலாஜி அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இது அவரிடம் செய்யக்கூடிய விசாரணைக்கு தடை ஏற்படுத்தும்படியாக இருக்கும். எனவே உச்சநீதிமன்றம் இவ்விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதங்களை முன்வைத்தார். ஆனால், உச்சநீதிமன்றம் அந்த கோரிக்கையை ஏற்க மறுத்து இருந்தது. இந்த விவகாரம் தற்போது உயர்நீதிமன்றத்தில் உள்ளதாகவும் உயர்நீதிமன்றம் முதலில் முடிவெடுக்கட்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறி, இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் முடிவெடுத்த பின்னர் விசாரிக்கலாம் எனத் தெரிவித்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், செந்தில் பாலாஜியால் பேச முடியாது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. அதே சமயம் அமலாக்கத்துறையால் வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளும் உச்சநீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து ஆட்கொணர்வு மனு மீது உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது சரியானது தான். உயர்நீதிமன்ற உத்தரவில் சந்தேகப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. எனவே இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிடுவது குறித்து நாளை முடிவேடுப்பொம் எனத் தெரிவித்து வழக்கை ஜூலை 4 ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளது.