
மனைவியுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்கும் போதே கணவன் கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர் 26 வயதான தினேஷ். டெய்லராக வேலை பார்த்து இவருக்கு, கடந்த 2023இல் ஃபதேபுரைச் சேர்ந்த ராதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருப்பதாகக் கூறப்படுகிறது.
திருமணம் ஆனது முதல் தினேஷுக்கும், ராதாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட சண்டையால் கணவன் தினேஷை விட்டு பிரிந்து, தனது பெற்றோர் வீட்டில் ராதா தங்கி வந்துள்ளார். தினேஷ் தன்னுடன் வருமாறு பல முறை கூறியபோதிலும், ராதா அதை தொடர்ந்து மறுத்து வந்துள்ளார். கடந்த 8 மாதங்களாக தனித்தனியாக பிரிந்து வாழும் இவர்கள், தொலைப்பேசி மூலமும் சண்டை போட்டு வந்துள்ளார்கள்.
கணவன் தினேஷை சிறைக்கு அனுப்பிவிடுவதாக ராதா தொடர்ந்து மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, தொடர்ந்து ஏற்பட்ட சண்டையால் தினேஷ் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், நேற்று தனது மனைவியுடன் வீடியோ கால் மூலம் தினேஷ் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தினேஷ், கத்தியை எடுத்துக் கொண்டு தன்னை குத்திக் கொண்டார். இதில், ராதா அலறித்துடித்துள்ளார்.
இதையடுத்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த தினேஷ் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தினேஷின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.