
சகோதரனுடன் நெருங்கிப் பழகியதால் இளம்பெண்ணை நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவைச் சேர்ந்தவர் சதீஷ் யாதவ். இவரது பக்கத்து வீட்டில் 24 வயது இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் சதீஷ், நேற்று இரவு அந்த பெண்ணின் வீட்டுக்குச் சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த சதீஷ், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து பெண்ணின் வயிற்றில் சுட்டார். இதில் அந்த பெண், ரத்த வெள்ளத்தில் மயக்கமடைந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதனையடுத்து, அந்த பெண் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து தகவல் அறிந்த போலீசார், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், சதீஷ் யாதவின் சகோதரர் சந்தீப் யாதவுக்கும், அந்த இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. தனது சகோதரனுடன் இளம்பெண் நெருங்கி பழகுவது சதீஷுக்கு பிடிக்காமல் போனாதால், இந்த உறவை கைவிடுமாறு பலமுறை கண்டித்துள்ளார். சம்பவம் நடந்த தினத்தன்று சதீஷ், இளம்பெண் வீட்டுக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், தலைமறைவாக இருந்த சதீஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.