மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், அம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக- 105 இடங்களையும், சிவசேனா- 56 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் கட்சி- 54 இடங்களையும், காங்கிரஸ் கட்சி- 44 இடங்களையும், இதர கட்சிகள்- 29 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர். ஆனால் ஆட்சி அமைப்பதற்கு 145 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சியமைக்க எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாததால் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல். அதிக இடங்களை வென்ற கட்சி என்ற அடிப்படையில் பாஜகவுக்கு முதலில் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். ஆனால் ஆட்சியமைக்க போவதில்லை என பாஜக கட்சி அறிவித்ததை தொடர்ந்து, சிவசேனாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஆளுநரை சந்தித்த சிவசேனா கட்சியின் தலைவர்கள், ஆட்சியமைக்க கூடுதல் அவகாசம் கோரிய நிலையில் ஆளுநர் அதை நிராகரித்தார்.

இந்நிலையில் இன்று (12/11/2019) டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை உள்துறை அமைச்சகம் குடியரசுத்தலைவருக்கு அனுப்பியது. மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்ற குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதனால் அம்மாநிலத்தில் உடனடியாக குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
