
பெண்களை மதமாற்றம் செய்பவர்களை தூக்கு தண்டனை வழங்கப்படும் என்று மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு கடந்த 8ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் கலந்து கொண்டார்.
அப்போது அவர், “அப்பாவியான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யப்படுபவர்களுக்கு இந்த அரசு எதிராக உள்ளது. இது தொடர்பாக, மரண தண்டனை வழங்க இந்த அரசு புதிய சட்டத்தை உருவாக்கியுள்ளது. அதே போல் மத சுதந்திரச் சட்டத்தின்படி, பெண்களை மதமாற்றம் செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்க ஒரு புதிய சட்டத்தை இந்த அரசு அறிமுகப்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
திருமணத்தைப் பயன்படுத்தி இந்து சமூகப் பெண்களை, மற்ற சமூகத்தினர் கட்டாய மத மாற்றம் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை பா.ஜ.க தொடர்ந்து முன்வைத்து வருகிறது. அவ்வாறு கட்டாயம் மத மாற்றங்கள் செய்பவர்களை ‘லவ் ஜிகாத்’ என்று பா.ஜ.க பொதுவாக அழைத்து வருகிறது. லவ் ஜிகாத்தை தடுக்கும் விதமாக உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.