
அரசிடம் பிச்சை கேட்டு மக்கள் வாழ பழகிவிட்டனர் என்று பா.ஜ.க அமைச்சர் கூறிய கருத்து தற்போது சர்ச்சையாகி உள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில், முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது அரசாங்கத்தின் கீழ் பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருபவர் பிரகலாத் பட்டேல். முன்னாள் ஒன்றிய அமைச்சரான இவர், ராஜ்கர் மாவட்டத்தில் ராணி அவந்திபாய் லோதியின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். ராணி அவந்திபாய் லோதி சிலையை திறந்து வைத்த பிறகு, அவர் பேசிய கருத்துக்கள் எதிர்க்கட்சிகளிடமிருந்து கடுமையான விமர்சனங்களை பெற்றுள்ளன.
அந்த கூட்டத்தில் பேசிய ம.பி அமைச்சர் பிரகலாத் பட்டேல், “மக்கள் அரசாங்கத்திடம் பிச்சை எடுக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டுள்ளனர். அரசியல் தலைவர்கள் மக்கள் முன்பு வரும் போதெல்லாம், அவர்களுக்கு ஒரு கூடை நிறைய மனுக்கள் கொடுக்கப்படுகின்றன. அவர்கள் மேடையில் மாலை அணிவிக்கப்படுகிறார்கள், அவர்களின் கைகளில் ஒரு கடிதம் வைக்கப்படுகிறது. இது ஒரு நல்ல பழக்கம் அல்ல. கேட்பதற்கு பதிலாக, கொடுக்கும் மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள். இது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். மேலும், பண்பட்ட சமூகத்தை உருவாக்க உதவும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
இலவசங்களை அதிகமாகச் சார்ந்திருப்பது சமூகத்தை வலுப்படுத்துவதற்குப் பதிலாக அதைப் பலவீனப்படுத்துகிறது. பிச்சைக்காரர்கள் படையை ஒன்று சேர்ப்பது சமூகத்தை வலுப்படுத்தாது. மாறாக அது பலவீனப்படுத்துகிறது. இலவசப் பொருட்களின் மீதான ஈர்ப்பு துணிச்சலான பெண்களுக்கான மரியாதையின் அடையாளமல்ல. நாம் வாழும் மதிப்புகளின்படி தான், ஒரு தியாகி மதிக்கப்படுகிறார். பிச்சை எடுத்த ஒரு தியாகியின் பெயரைக் கூற முடியுமா? அப்படியானால், சொல்லுங்கள். இது போன்று நாங்கள் தொடர்ந்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறோம், உரைகள் நிகழ்த்துகிறோம், மேலும் முன்னேறுகிறோம்” என்று கூறினார். இவரது சர்ச்சை பேச்சுக்கு, மாநில எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றன.