
நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் மற்றும் அவருடைய மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரராக உள்ள 'ஈசன் ப்ரொடக்ஷன்' என்ற நிறுவனம் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிப்பில் 'ஜகஜால கில்லாடி' என்ற படம் தயாரிக்கப்பட்டது. இந்தப் பட தயாரிப்பு பணிக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் 3.74 கோடி ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த கடன் ஒப்பந்தத்தின் பொழுது ஆண்டுக்கு 30 சதவீத வட்டியுடன் திரும்பத் தருவதாக உறுதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கடன் தொகையை திருப்பித் தராததால் ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டிருந்தார். கடன் தொகை வட்டியுடன் 9.39 கோடி ரூபாய் வசூலிக்க ஏதுவாக 'ஜெகஜால கில்லாடி' படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு ஒப்படைக்கும்படி 2024 ஆம் ஆண்டு மே மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த உரிமைகளை பெற்றுக் கொண்டு கடன் தொகையை ஈடு செய்ய வேண்டும் மீதி தொகையை ஈசன் ப்ரொடக்சன் நிறுவனத்திடமே வழங்க வேண்டும் எனவும் மத்தியஸ்தர் தெரிவித்திருந்தார். இந்த உத்தரவின் படி இந்த படத்தின் அனைத்து உரிமைகளையும் கேட்ட பொழுது படம் இன்னும் முடிவடையவில்லை என ஈசன் ப்ரொடக்சன் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில் மத்தியஸ்தர் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தும் வகையில் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய வேண்டும் என தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கை பொறுத்தவரை பதில் மனு தாக்கல் செய்வதற்கு ஈசன் ப்ரொடக்சன் நிறுவனத்திற்கு அவகாசம் கேட்ட பொழுதும் கூட இதுவரை பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. எனவே நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். ஜப்தி குறித்து சார்பதிவாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளை மறுதினம் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.