
ஹரியானா மாநிலம் ரோஹ்தக் - டெல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான மர்ம சூட்கேஸ் ஒன்று இருந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அந்த சூட்கேஸை திறந்து பார்த்துள்ளனர்.
அதில், இளம்பெண் ஒருவரின் சடலம் இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்த தொடங்கினர். அந்த விசாரணையில், ஹரியானா காங்கிரஸ் கட்சியின் கிராமப்புற மாவட்ட துணைத் தலைவர் ஹிமானி நர்வால் (23) என்பது தெரியவந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின், பாரத் ஜோத்ரா யாத்திரையில், ஹிமானி நர்வால் பங்கேற்றுள்ளார் என்பதும் தெரியவந்தது. பாரத் ஜோடோ யாத்திரையின் போது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியுடன் நடந்து செல்லும் படங்கள் வைரலானதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஹிமானி நர்வாலின் கழுத்தில் காயங்கள் இருந்தததால், அவரை கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தனது விசாரணையை தீவிரப்படுத்தினர். சிசிடிவி கேமரா காட்சிகள் உள்ளிட்டவற்றை சேகரித்து விசாரணை நடத்தியதில், சச்சின் என்பவர் தான் இந்த கொலையை செய்துள்ளார் என்று போலீசார் உறுதிப்படுத்தினர்.
இதையடுத்து, நடத்தப்பட்ட விசாரணையில், ஹரியானாவின் பகதூர்கர் பகுதியைச் சேர்ந்த சச்சினும், ஹிமானியும் நீண்ட காலமாக உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. சச்சினிடம் ஹிமானி நர்வால் லட்சக்கணக்கில் பணம் பறித்து அவரை மிரட்டி வந்துள்ளார். தொடர்ந்து பணம் கேட்டு வந்ததால் விரக்தியடைந்த சச்சின், ரோஹ்தக்கில் உள்ள ஹிமானி வீட்டிற்குச் சென்று அவரை கொலை செய்துள்ளார். அதன் பின்னர், ஹிமானி நர்வாலின் உடலை ஒரு சூட்கேஸில் அடைத்து பேருந்து நிலையத்தில் வீசி விட்டுச் சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில், அந்த உடல் போலீசாரிடம் சிக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.