ஜே.இ.இ மற்றும் நீட் நுழைவுத் தேர்வுகளை நடத்துவதில் தாமதிக்கக் கூடாது என்று 150 கல்வியாளர்கள் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் காலவரையரையின்றி மூடப்பட்டுள்ள நிலையில் கடந்த மே மாதமே நடைபெற இருந்த நீட் தேர்வு கரோனா காரணமாக ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செப்டம்பர் 13 அன்று தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல ஜே.இ.இ. மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையிலும், ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கல்வி நிலையங்களின் தொடர் முடக்கம், தேர்வு மையத்தின் பாதுகாப்பு குறித்த அம்சங்கள், தேர்வு நேரத்திலான போக்குவரத்து வசதிகள் உள்ளிட்டவை குறித்துப் பல தரப்பினரும் கவலை தெரிவித்து வந்தனர்.
இதனிடையே, உச்சநீதிமன்றத்தில் கரோனா தீவிரமாக இருக்கும் நிலையில் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் அல்லது ரத்து செய்யவேண்டும் என மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து நீட், ஜே.இ.இ. தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் அமித் காரே தெரிவித்தார். இந்நிலையில், ஜேஇஇ மற்றும் நீட் நுழைவுத் தேர்வுகளை நடத்துவதில் தாமதிக்கக் கூடாது என்று 150 கல்வியாளர்கள் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில், "ஜே.இ.இ மெயின் மற்றும் நீட் தேர்வுகளை நடத்த மேலும் தாமதிப்பது மாணவர்களின் எதிர்காலத்தை விட்டுக்கொடுப்பதாக அமையும். தங்களின் சொந்த அரசியல் நோக்கத்துக்காகச் சிலர் மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாட முயல்கின்றனர். ஒவ்வோர் ஆண்டைப் போல, லட்சக்கணக்கான மாணவர்கள் இந்த ஆண்டு 12-ம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்று, அடுத்த அடி எடுத்துவைக்க ஆவலுடன் வீட்டிலேயே காத்திருக்கின்றனர். இதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டால், மாணவர்களின் முக்கியத்துவம் வாய்ந்த ஓராண்டு முழுவதும் வீணாக வாய்ப்புள்ளது. எந்தக் காரணத்துக்காகவும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் கனவுகளும் எதிர்காலமும் பலியாவதை அனுமதிக்க முடியாது. முழுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மத்திய அரசு இந்த தேர்வுகளை வெற்றிகரமாக நடத்தி முடிக்கும் என நம்புகிறோம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.