Skip to main content

வெட்டுக்கிளிகளைக் கொல்ல நவீன இயந்திரங்கள் வாங்கும் மத்திய அரசு...

Published on 01/06/2020 | Edited on 01/06/2020

 

government imports machines to contain locust in india

 

அதிகரித்துவரும் வெட்டுக்கிளி படையெடுப்பைக் கட்டுப்படுத்தும் வகையில், வெட்டுக்கிளிகளை அழிக்க புதிய மற்றும் நவீன இயந்திரங்களை இறக்குமதி செய்ய உள்ளது மத்திய அரசு.
 


ஜூலை 2019 முதல் இந்த ஆண்டின் தொடக்கம் வரை ராஜஸ்தான் மாநிலத்தின் 10 மாவட்டங்களில் 3.6 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர்களைச் சேதப்படுத்திய வெட்டுக்கிளிகள் படையெடுப்பு, பின்னர் அங்கிருந்து பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கும் பரவியது. லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் தினந்தோறும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள விவசாயப் பயிர்களை நாசம் செய்தன. இந்நிலையில் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசம் செய்ய ஆரம்பித்துள்ளன. ஏற்கனவே மேற்கு மற்றும் கிழக்கு ராஜஸ்தானில் சுமார் 5,00,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் பரவியுள்ள பயிர்களை அழித்துள்ள இந்த கூட்டம் டெல்லி, மஹாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் வெட்டுக்கிளிகளை அழிக்க புதிய மற்றும் நவீன இயந்திரங்களை இறக்குமதி செய்ய உள்ளது மத்திய அரசு. இதுகுறித்து பேசிய மத்திய வேளாண்துறை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி, பூச்சிக்கொல்லிகள் தெளிக்கும் 60 நவீன இயந்திரங்கள், மற்றும் சிறப்பு இயந்திரங்கள் பொருத்தப்பட்ட 5 ஹெலிகாப்டர்கள் இங்கிலாந்திடம் இருந்து வாங்க திட்டமிடப்பட்டு முன்பதிவு செய்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார். இதில், ஜூன் முதல் வாரத்தில் பாதி எண்ணிக்கையிலான இயந்திரங்கள் இந்தியா வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கலிங்கப்பட்டியில் வெட்டுக்கிளிகள் முற்றுகை! அச்சத்தில் விவசாயிகள்!

Published on 02/06/2020 | Edited on 02/06/2020


ஆப்ரிக்கா கண்டத்தை ஒரு வழியாக்கிவிட்டு ஏமன், பாகிஸ்தான் வழியாக இந்தியாவின் பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத்திலும் கூட்டம் கூட்டமாக அப்பிய மஞ்சள் நிற வெட்டுக்கிளிப்படைகள் அங்குள்ள விளை நிலங்களை நாசப்படுத்தி வருகின்றன. மத்திய, மாநில அரசுகள் அதனை அழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. 


ஏனெனில் பல ஆயிரம் ஹெக்டேரின் விளை பொருட்களை ஒரு சில மணி நேரத்தில் அழித்து விடும் தன்மை கொண்ட இவைகள் அந்த பகுதியையே உணவு பஞ்சத்தில் தள்ளி விடுகிற வல்லமை கொண்டவைகள். ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் சுமார் நான்கு கோடி எண்ணிக்கையிலிருக்கும் இந்த வெட்டுக்கிளிகளில், பெண் வெட்டுக்கிளியின் கருப்பை 150 கருமுட்டைகளைக் கொண்டிருக்குமாம். 

இந்த கருமுட்டைகள் அனைத்தும் இரண்டு வாரத்தில் குஞ்சுகளாக மாறி அவைகள் அனைத்தும் ஒரு மாதத்திற்குள் பறக்கும் தன்மை பெற்று தனியாக உணவு உண்ணுகிற பக்குவம் பெற்றுவிடும் என்றால் அதன் இனப்பெருக்கம் கற்பனையையும் தாண்டிய ஒரு சில நூறு கோடி மடங்காகிவிடும் என்று இதன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றார்கள். வெளிநாட்டு ஊடகங்களிலும்  இது தொடர்பான தகவல்கள் வருகின்றன.

 

 


இதனிடையே தமிழகத்தின் நீலகிரி, கிருஷ்ணகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் வெட்டுக்கிளிகளின் தொல்லை அதிகரித்ததாக புகார்களும் வருகின்றன. இந்நிலையில் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகிலுள்ள கலிங்கப்பட்டியிலும் வயல் புறத்திலும் வெட்டுக்கிளிகள் முற்றுகையிட்டுள்ளன. அந்த ஊரில் காளிராஜ், மற்றும் மன்மதன் இருவருக்கும் சொந்தமான சுமார் 10 ஏக்கர் மானாவாரிக்காடு ஊரின் வடபுறத்தில் உள்ளது. 

அவர்கள் இதில் விதைத்த பருத்தி சாகுபடியின் முதல் மகசூலை எடுத்து விட்டனர். அதன்பின் நிலத்தில் காய்ந்த பருத்திச் செடிகள் தற்போது பெய்த கோடை மழையினால் மீண்டும் துளிர் விட்டுள்ளது. இந்நிலையில் விவசாயி காளிராஜ் விளை நிலத்திற்குச் சென்று பார்த்தபோது செடிகளில் ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் அப்பியிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.


 

nakkheeran app
இது குறித்து தகவலறிந்த நெல்லை வேளாண் துறை இணை இயக்குனர் கஜேந்திர பாண்டியன், கலெக்டரின் உதவியாளரான அசோக்குமார். வேளாண் துணை இயக்குநர்கள் நல்லமுத்து ராஜா, பாலசுப்பிரமணியம் மற்றும் விவசாய கல்லூரி பேராசியர் என அதிகாரிகள் போன்றவர்கள் கள ஆய்வு மேற்கொண்டனர்.

ஆனால் மறுநாள் அந்த வெட்டுக்கிளிகள் சென்று விட்டதாகச் சொல்லப்படுகிறது. எனவே ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், காளிராஜ் முதல்நாள் பிடித்து வைத்திருந்த வெட்டுக்கிளிகள் மற்றும் தோட்டங்களை ஆய்வு செய்தனர். அவைகள் பச்சை நிறத்திலிருக்கின்றன. ஆய்வு செய்த கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி பூச்சியியல் உதவிப் பேராசிரியர் இளஞ்செழியன், இப்பகுதியில் காணப்பட்ட வெட்டுக்கிளிகள் வடமாநில நிலங்களை ஆட்டிப் படைக்கும் பாலைவன வெட்டுக்கிளி வகையை சார்ந்ததல்ல. மேலும் இவைகளை கோவை வேளாண் பல்கலைக்கழக பூச்சியில் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு எந்த வகை வெட்டுக்கிளி என்று கண்டறியப்படும். இதைக்கண்டு விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை. இவைகளால் பயிர்களுக்குப் பெரிய பாதிப்பு வர வாய்ப்பு இல்லை என்றார். என்றாலும் வேளாண் பருவத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சம் பரவியிருக்கிறது விவசாயிகள் மத்தியில்.

 

Next Story

வெட்டுக்கிளிகள் குறித்த அச்சம் விவசாயிகளுக்கு வேண்டாம்! வேளாண் துறை இயக்குனர் பேட்டி!

Published on 01/06/2020 | Edited on 01/06/2020

 

Farmers - Director of the Department of Agriculture


கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் குறுவை சாகுபடி உழவுப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக வேளாண் துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஆகியோர் மாவட்டத்திலுள்ள பரங்கிப்பேட்டை, கீரப்பாளையம், குமராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் களமிறங்கினர். 
 


இதனைத் தொடர்ந்து குமராட்சி ஒன்றியம் கண்டியாமேடு கிராமத்தில் வயல் வெளிக்கு நடுவே விவசாயிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களுக்கு உள்ள குறைகளையும் தேவைகளையும் எடுத்துக் கூறினார்கள். 

அப்போது விவசாயிகள் பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்து கொடுக்கப்படும் எனவும் விதைகள் தயார் நிலையில் உள்ளது. அதேபோல் மாவட்டத்தில் உள்ள உரக் கிடங்கில் உரம் இருப்பு உள்ளது விவசாயிகள் நடவு பணிகளைச் செய்திட விவசாய டிராக்டர்கள் உள்ளது அதனை உழவன் செயலி மூலம்  விவசாயிகள் முறையாகப்  பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதேபோல் கரோனா  காலங்களில் தற்போது நடவு பணிகள் நடைபெறுவதால் விவசாயிகள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வயல் வேலைகளைச் செய்திட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
 

 


இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் கூறுகையில்,  வருகிற ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதையடுத்து வேளாண்துறை, டெல்டா மாவட்டங்களில் அனைத்து விதமான முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறது. விவசாயிகளுக்கு தேவையான நெல் விதைகள், உரங்கள் இருப்பு உள்ளிட்டவை விவசாயிகளுக்குத் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. 

கடலூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி இந்த ஆண்டு 41 ஆயிரம் ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 19 ஆயிரம் ஏக்கரில் தற்போது பயிரிடப்பட்டுள்ளது. 17 ஆயிரம் ஏக்கர் நாற்றங்கால் அளவில் உள்ளது. விவசாயிகளுக்கு குடிமராமத்து பணிகள் மூலம் அனைத்து கால்வாய்களையும் தூர்வாரப்பட்டு உள்ளது. இதனைப் பயன்படுத்தி விவசாயிகள் நல்ல சாகுபடி செய்யவேண்டும். அதேபோல் வெட்டுக்கிளி காற்றின் திசை வேகத்தில் தான் செல்லும் என 'ஜோத்பூர் வெட்டுக்கிளி எச்சரிக்கை மையம்' தெரிவித்துள்ளது. அதன்படி பார்த்தால் பஞ்சாப் மாநிலம் நோக்கித்தான் வெட்டுக்கிளிகள் செல்லும் தமிழகம் வர வாய்ப்பு இல்லை என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 

http://onelink.to/nknapp


இருந்தாலும் நமது முதலமைச்சர் அறிவுறுத்தல்படி ஜோத்பூர் எச்சரிக்கை மையத்தின் தொடர்பில் இருக்கிறோம் விவசாயிகள் கவலை அடைய வேண்டாம். உழவன் செயலி 6 லட்சம் விவசாயிகள் டவுன்லோட் செய்து வைத்துள்ளனர். இதில் ஒரு விவசாயின் மகனோ, மகளோ, பேரனோ, பேத்தியோ இருந்தாலே போதும் அதனை டவுன்லோட் செய்து தகவல்களை விவசாயிக்குத் தெரிவிக்கலாம். இதில் தெரிவிக்கப்பட்டுள்ள மானிய திட்டம், பயிர் காப்பீடு, உரம் இருப்பு, மழை பற்றிய வானிலை அறிக்கை உள்ளிட்டவற்றை இந்த உழவன் செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம் என அவர் கூறினார். காவேரி விவசாய சங்க வாழ்வாதார பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரன், கிராம விவசாயிகள் உள்ளிட்ட வேளாண்மை துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.