Skip to main content

 “கூட்டாட்சித் தத்துவத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும்” - முதல்வர் ஆவேசம்!

Published on 20/02/2025 | Edited on 20/02/2025

 

CM MK Stalin says It is a opposite blatant of the federal principle

கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதியும், தமிழ்நாட்டிற்கு 'சமக்ர சிக்‌ஷா' திட்டத்தின்கீழ் வரவேண்டிய நிதிகளை ஒன்றிய அரசு உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்குத்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (20.02.2025) கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “தேசிய கல்விக் கொள்கை - 2020ஐ முழுமையாக அமல்படுத்தி மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டிற்கான 'சமக்ர சிக்க்ஷா' (Samagra Shisha) திட்டத்தின் கீழ் நிதி விடுவிக்கப்பட மாட்டாது என்று ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் சமீபத்தில் தெரிவித்திருப்பது ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இது தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெருத்த கவலையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  தமிழ்நாட்டின் கல்வி மற்றும் சமூகச் சூழலில் இருமொழிக் கொள்கையானது நீண்ட காலமாக ஆழமாக வேரூன்றியுள்ளது. அதனைப் பின்பற்றுவதில் தமிழ்நாடு எப்பொழுதும் உறுதியாக உள்ளது. அலுவல் மொழிகள் விதி, 1978-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அலுவல் மொழிச் சட்டம் 1963 ஐச் செயல்படுத்துவதில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நவோதயா வித்யாலயா போன்ற ஒன்றிய அரசுப் பள்ளிகள் மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றுவதால் தான் தமிழ்நாட்டில் அவை நிறுவப்படவில்லை. இந்த இரு மொழிக் கொள்கை மற்றும் சமூக நீதியின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட முற்போக்குக் கொள்கைகளின் காரணமாகக் கடந்த அரை நூற்றாண்டில் தமிழ்நாடு அடைந்துள்ள மகத்தான முன்னேற்றங்கள் மற்றும் அதற்கு வித்திடும் முன்முயற்சிகளைக் காண முடிகிறது. எங்கள் இருமொழிக் கொள்கையில் எந்தவொரு மாற்றமும் கொண்டுவர உத்தேசிப்பது தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் பெரிய அளவில் பயனளிக்காது.

இதுதவிர தேசியக் கல்விக் கொள்கை-2020 இல் குறிப்பிடப்பட்டுள்ள சில விதிகள் குறித்து 27.08.2024 நாளிட்ட தனது கடிதத்தின் மூலம் தமிழ்நாடு அரசின் ஆழ்ந்த கவலைகள் முறையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, 27.09.2004 அன்று தனிப்பட்ட முறையில் விரிவான கோரிக்கை மனுவாகப் பிரதமர் மோடியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இருப்பினும் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும் சமக்ர சிக்‌ஷா திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய நிதி ஒன்றிய அரசால் வழங்கப்படாமல் உள்ளது. ஒன்றிய அரசின் இரண்டு வெவ்வேறு திட்டங்களான சக்ர சிக்‌ஷா,  திட்டத்தையும் தேசிய கல்விக் கொள்கையைப் பிரதிபலிக்கும் பிம்.எம்.ஸ்ரீ (PM SHRI) திட்டத்தையும் ஒன்றாகப் பொருத்திப் பார்ப்பது என்பது அடிப்படையில் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்பதைத் தான் மீண்டும் வலியுறுத்துகிறேன். தற்போது ஒரு மாநிலத்தில், அங்குள்ள காலச் சூழலுக்கேற்ப பின்பற்றப்பட்டு வரும் கொள்கைகளுக்கு எதிராக அந்த மாநிலத்தைக் கட்டாயப்படுத்துவதற்கு நிதி வழங்கும் விவகாரங்களில் ஒன்றிய அரசு அழுத்தம் தரும் இத்தகைய முயற்சி கூட்டாட்சித் தத்துவத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும். குறிப்பிட்ட தேவைகளின் அடிப்படையில் தங்களது கல்விக் கொள்கைகளை வடிவமைக்கும் மாநிலங்களின் உரிமைகளைப் பெருமளவில் பாதிக்கும்.

தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டத்தின் கீழ் நிதி விடுவிக்கப்படாததால் ஆசிரியர்கள் சம்பளம், மாணவர்களுக்கான நலத் திட்டங்கள் உள்ளடக்கிய கல்வி முன்னெடுப்பு முயற்சிகள், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பயிலும் வறிய நிலையில் வாழும் மாணவர்களுக்கான கல்வித் தொகையைத் திருப்பிச் செலுத்துதல் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள வாகன போக்குவரத்து போன்றவற்றிற்கான முக்கிய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் இலட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர் நலன் கருதி, இந்த விஷயத்தில்  இந்தியப் பிரதமர்  தலையிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இந்தத் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு நிதி விடுக்கப்படாமல் உள்ளதால் ஏற்பட்டுள்ள வருந்தத்தக்கச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தேசிய கல்விக் கொள்கை - 2020ஐ செயல்படுத்துவதோடு 'சமக்ரா சிக்‌ஷா' திட்டத்தைப் பொருத்திப் பார்க்காமல் 2024-25ஆம் நிதியாண்டில் இந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வேண்டிய ரூ.2,152 கோடி நிதியினை உடனடியாக விடுவிக்க  வேண்டும். இப்பொருண்மையின் தீவிரத்தை உணர்ந்து பிரதமர் மோடி, தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். 

சார்ந்த செய்திகள்