Skip to main content

“கல்வியை அரசியலாக்க வேண்டாம்...” -  மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தல்!

Published on 21/02/2025 | Edited on 21/02/2025

 

Union Minister Dharmendra Pradhan insistence Dont politicize education

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் 2,000 கோடி ரூபாயைத் தரச் சட்டத்தில் இடம் இல்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு எதிர்க்கிறது. உள்ளூர் மொழிக்கு முதலிடம் என்ற தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு ஏற்கிறதா இல்லையா?. ஏற்றால் தான் நிதி” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இவரது பேச்சுக்குத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதோடு இதன்மூலம் மும்மொழிக் கொள்கையைத் திணிக்க முயல்வதாகக் கூறி மத்திய பாஜக அரசுக்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய சூழலில் தான் தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கையின் கீழ் மும்மொழிக் கொள்கையை தினிப்பதாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், “மாணவர்களிடையே போட்டியை உருவாக்க, சமமான நிலையை உருவாக்க, நாம் ஒரு பொதுவான தளத்திற்கு வர வேண்டும். தேசிய கல்விக் கொள்கை என்பது புதிய லட்சியப் பொதுத் தளம் ஆகும். நான் எல்லா மொழிகளையும் மதிக்கிறேன். பிரதமர் மோடியின் யோசனையில் வடிவமைக்கப்பட்ட இந்த தேசிய கல்விக் கொள்கை, தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

நமது நாகரிகத்தின் பழமையான மொழிகளில் தமிழ் ஒன்றாகும். ஆனால் தமிழ்நாட்டில் ஒரு மாணவர் கல்வியில் பன்மொழி அம்சத்தைக் கற்றுக்கொண்டால் என்ன தவறு?. அது தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளாக இருக்கலாம். அவர்கள் மீது இந்தி அல்லது வேறு எந்த மொழியையும் திணிக்கவில்லை. இது தொடர்பாக தமிழ்நாட்டில் சில நண்பர்கள் அரசியல் செய்கிறார்கள். ஆனால் மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையின் கீழ் செயல்படுத்த உறுதிபூண்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையில் சில நிபந்தனைகள் உள்ளன” எனத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதியும், தமிழ்நாட்டிற்கு ‘சமக்ர சிக்‌ஷா’ திட்டத்தின்கீழ் வரவேண்டிய நிதிகளை மத்திய அரசு உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று(20.02.2025) கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இன்று (21.02.2025) கடிதம் எழுதியுள்ளார்.

Union Minister Dharmendra Pradhan insistence Dont politicize education

அதில், “தமிழ் மொழி மற்றும் அதன் கலாச்சாரத்தை உலக அளவில் எடுத்துச் செல்வதில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக உள்ளார். எனவே கல்வியை அரசியலாக்க வேண்டாம். அரசியல் வேறுபாடுகளைக் கடந்து மாணவர்களின் நலனுக்காகச் செயல்பட வேண்டும். தேசிய கல்விக் கொள்கையில் ஒரு மாநிலத்தில் மற்றொரு மொழியைத் திணிப்பது என்ற கேள்விக்கே இடம் இல்லை. பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று எழுதியுள்ள கடிதம் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாக உள்ளது. தேசியக் கல்விக் கொள்கையுடன் இணைந்ததுதான் ‘சமக்ரா சிக்சா’ திட்டம். பாஜக ஆட்சி செய்யாத பல மாநிலங்கள் கூட தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளன. எனவே தமிழ்நாடும் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்.

கடந்த 1968ல் தொடங்கி இந்தியக் கல்வித் திட்டத்தின் முதுகெலும்பாக மும்மொழிக் கொள்கை உள்ளது. தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை இதுவரை முறையாக நடைமுறைப் படுத்தாதது துரதிர்ஷ்டவசமானது. இதனால் காலப்போக்கில் வெளிநாட்டு மொழிகளை நம்பி இருக்க வேண்டிய சூழல் வந்துவிட்டது. தேசிய கல்விக் கொள்கையைக் குறுகிய பார்வையுடன் பார்ப்பது பொருத்தமற்றது” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்