
கடந்தாண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி களம் கண்டனர். இந்த கூட்டணியில், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியை இணைப்பதற்கு காங்கிரஸ் முயற்சி செய்து வந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், மாயாவதியை இந்தியா கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் நிபந்தனை விதித்தாக தகவல் வெளியானது. இதனால் தான், மாயாவதி அக்கூட்டணியில் இணையவில்லை என்று ஊடக செய்திகள் மூலம் தகவல் வெளியானது.
அதன் பின்னர், அந்த தேர்தலில் அகிலேஷ் யாதவ் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைத்து காங்கிரஸ் போட்டியிட்டது. அதில், சமாஜ்வாதி கட்சி 37 இடங்களைக் கைப்பற்றியது. ஆனால், தனித்து போட்டியிட்ட மாயாவதி ஒரு இடத்தைக் கூட கைப்பற்றாமல் படுதோல்வி அடைந்தார்.
இந்த நிலையில், மாயாவதிக்கு அழைப்பு விடுத்தது குறித்து ராகுல் காந்தி தனது கருத்தை பகிர்ந்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, தனது சொந்த தொகுதியான உத்தரப் பிரதேசத்தில் உள்ள ரேபரேலியில் 2 நாள் பயணமாக அங்கு சென்றார். அங்கு நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் ராகுல் காந்தி பங்கேற்றார். அதன் பிறகு, பர்காட் சவுராஹா பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இருக்கும் பட்டியலின மாணவர்களைச் சந்தித்து அவர்களுடன் உரையாடினார்.
அப்போது ராகுல் காந்தி பேசியதாவது, “கன்ஷி ராம் அடிக்கல் நாட்டினார், அவர் பணியை மாயாவதி தொடர்ந்தார் என்று நான் சொல்ல வேண்டும். நானும் இதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் எனக்கு ஒரு கேள்வி உள்ளது. மாயாவதி இப்போதெல்லாம் தேர்தலில் சரியாகப் போட்டியிடுவதில்லை ஏன்?. பா.ஜ.கவுக்கு எதிராக, மாயாவதி எங்களுடன் சேர்ந்து போராட வேண்டும் என்று விரும்பினோம். ஆனால் மாயாவதி, ஏதோ ஒரு காரணத்திற்காகப் போராடவில்லை. சமாஜ்வாடி கட்சி உட்பட மூன்று கட்சிகளும் ஒன்றிணைந்திருந்தால், பாஜக ஒருபோதும் தேர்தலில் வெற்றி பெற்றிருக்காது என்பதால் நான் மிகவும் வருத்தப்பட்டேன்” என்று கூறினார்.
இதற்கு தனது எக்ஸ் பக்கத்தில் பதிலளித்த மாயாவதி, “எப்படியிருந்தாலும், காங்கிரஸ் மற்றும் பாஜகவின் நடத்தை, குணம், முகம் போன்றவை அம்பேத்கர் மற்றும் அவரது பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவை தான். காங்கிரஸ் வலுவாக உள்ள அல்லது காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில், பகுஜன் சமாஜ் கட்சியையும் நிர்வாகிகளையும் விரோதியாகவும் சாதிய மனநிலையோடு தான் பார்க்கிறது. ஆனால், காங்கிரஸ் பலவீனமாக உள்ள உத்தரப் பிரதேசத்தில் கூட்டணிக்கு கூட்டணிக்கு அழைப்பது என்பது ஏமாற்றும் பேச்சு. இது அக்கட்சியின் இரட்டை நிலைப்பாடு இல்லாமல் வேறென்ன?” எனப் பதிவிட்டுள்ளார்.