இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்தது. அதே போன்று தென் மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வட மாநிலங்களை விட சற்று அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில், கர்நாடகாவில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில், தற்போது கணிசமான அளவு குறைந்து வருகின்றது.
இன்று மட்டும் கர்நாடகாவில் 319 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 326 பேர் கரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமானவர்களின் எண்ணிக்கை 9,28,682 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,46,908 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 5,997 ஆக உள்ளது. மேலும் இன்று மட்டும் 6 பேர் கரோனா காரணமாக பலியாகி உள்ளனர். இதுவரை மொத்தமாக கரோனாவுக்கு 12,289 பேர் பலியாகியுள்ளனர். ஒருபுறம் கரோனா குறைந்து வந்தாலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்க உள்ளது அம்மாநில மக்களை வருத்தமடைய செய்துள்ளது.