கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ், மஜக கூட்டணியில் இருந்து கடந்த வாரம் 13 எம்.எல்.ஏ க்கள் ராஜினாமா செய்வதாக சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தனர். அதன் பின் சுயேச்சை எம்.எல்.ஏ நாகேஷும் தனது ஆதரவை வாபஸ் வாங்கினார். இதனால் அந்த மாநிலத்தில் ஆட்சியே கவிழும் சூழல் உருவானது.
பின்னர் அதிருப்தியில் இருந்த அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக 21 காங்கிரஸ் அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். பின்னரும் குழப்பம் தொடர்ந்த நிலையில் மஜக வை சேர்ந்த அமைச்சர்களும் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனையடுத்து புதிய மந்திரிசபை விரைவில் அமைக்கப்படும் என அம்மாநில முதல்வர் குமாரசாமி நேற்று அறிவித்தார். அதிருப்தி எம்.எல்.ஏ க்கள் சிலருக்கு இதில் அமைச்சர் பதவிகள் வழங்கப்படும் என எத்ரிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மும்பை சொகுசு விடுதியில் தங்கியிருந்த அதிருப்தி எம்.எல்.ஏ க்கள் நேற்று இரவு கோவா புறப்பட்டு செல்வதாக இருந்தது. பின்னர் கோவா செல்லாமல் வேறொரு இடத்தில் அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் நிகழும் இந்த குழப்பங்களுக்கு பாஜக தான் காரணம் என ஆளும் கூட்டணி காட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் கர்நாடகாவின் நிலவும் இந்த குழப்ப சூழலால் இன்று மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகியவை முடங்கின. பாஜக வுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தின.
கர்நாடக அரசியல் இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சித்தராமையா, "இது முழுக்க முழுக்க பாஜகவின் வேலை தான். பாஜகவின் மாநில தலைவர்கள் மட்டுமின்றி அமித்ஷா, மோடி ஆகியோரும் இதில் ஈடுபட்டுள்ளனர். கட்சி மாறினால் பணம், பதவி தருவதாக பாஜக கூறி பாஜக எம்.எல்.ஏ க்கள் ஆதரவை பெற்று வருகிறது. இது ஜனநாயகத்திற்கு எதிரானது.
விரைவில் ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ க்கள் திரும்ப வந்து ராஜினாமாவை வாபஸ் வாங்க வேண்டும். இல்லையெனில் தகுதிநீக்கம் மற்றும் 6 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும் என சபாநாயகரிடம் மனு அளிக்க உள்ளோம். எனவே அதற்குள் வந்தால் மீண்டும் இணைந்துக்கொள்ளலாம்" என கூறியுள்ளார். இந்த நிலையில் 13 பேரின் ராஜினாமாவை இன்னும் ஏற்கவில்லை என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.