பிரதமர் மோடியின் நிகழ்ச்சியைக் காணவிடாமல் தலித் மாணவர்களை குதிரைக் கொட்டகையில் அமர்த்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

mmodi

இமாச்சல்பிரதேசம் மாநிலம் குல்லு பகுதியில் உள்ளது அரசு மேல்நிலைப்பள்ளி. இந்தப் பள்ளியில் சில தினங்களுக்கு முன்பு, பிரதமர் மோடியின் ‘பரிக்‌ஷா பார் சார்ச்சா’ என்ற நிகழ்ச்சி தொலைக்காட்சி வழியாக ஒளிபரப்பப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டபோது, அந்தப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் மேகர் சந்த் என்பவர் தலித் மாணவர்களை பள்ளி வளாகத்தை விட்டு வெளியேற்றியுள்ளார். வெளியில் அனுப்பப்பட்ட மாணவர்கள் குதிரை மற்றும் மாட்டு கொட்டகைகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். பாதியில் கிளம்பும் மாணவர்களுக்கு மதிப்பெண் குறைக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

Advertisment

இதுகுறித்து சம்மந்தப்பட்ட மாணவர்கள் பள்ளி நோட்டுப் புத்தகங்களில் புகாராக எழுதி காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர். ‘மோடியின் நிகழ்ச்சியைக் காணவிடாமல், எங்களை குதிரைக் கொட்டகையில் அமர்த்தினார்கள். இந்தப் பள்ளியில் நீண்டகாலமாக சாதிய ரீதியிலான ஒடுக்குமுறை தொடர்கிறது. அது மதிய உணவுத் திட்டத்திலும் இருக்கிறது. நாங்கள் மற்ற மாணவர்களுடன் சேராமல், தனியாக உட்கார வைக்கப்படுகிறோம். பள்ளியின் தலைமையாசிரியரும் அதைக் கண்டுகொள்வதில்லை. அவரும் தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறார்’ என அதிர்ச்சியூட்டும் வகையிலான புகாரை எழுதியுள்ளனர்.

மாணவர்களின் இந்தப் புகார்க் கடிதம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்த, சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

Advertisment