Skip to main content

“கலைஞரின் சொந்த ஊரில் இருந்து துவங்கியதில் மிகுந்த மகிழ்ச்சி” - துணை முதல்வர் பேட்டி!

Published on 06/03/2025 | Edited on 06/03/2025

 

Dy CM udhaynidhi stalin says Very happy to start from the kalaignar hometown 

திருவாரூர் மாவட்டம் பழவனக்குடி ஊராட்சியில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (06.03.2025) சந்தித்து கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன், தாட்கோ தலைவர் உ. மதிவாணன், மாவட்ட ஆட்சித்தலைவர் வ. மோகனசந்திரன்,உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பெண்களுடைய முன்னேற்றத்திற்காகவும், அவர்கள் பொருளாதார ரீதியாக தனித்து இயங்கவும். அவர்கள் சுயமரியாதையுடன் வாழவும், கலைஞர், 1989ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் முதன்முறையாக மகளிர் சுயஉதவிக் குழு என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்குவது. அவர்களுக்கு (skilled based programming) திறன் பயிற்சி அளிப்பது, சுய தொழில் தொடங்க ஊக்குவிப்பது என தற்போது முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்கள் அந்தத் துறைக்கு அமைச்சராக இருந்தபோது, பல்வேறு முன்னேற்றங்களை அந்தத் துறையில் செயல்படுத்தி, அதனடிப்படையில் தற்போது கிராமப்புறங்களில் 3.30 இலட்சம் குழுக்களும், நகர்ப்புறத்தில் 1.50 இலட்சம் குழுக்களும், என மொத்தம் 4 இலட்சத்து 80 ஆயிரம் குழுக்கள் தற்போது நடை முறையில் (active) இருக்கிறார்கள். இக்குழுக்களில் 54 இலட்சம் மகளிர் உறுப்பினர்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற இந்த 4 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 1 இலட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாயை வங்கிக் கடன் இணைப்பாக பெற்றுத் தந்துள்ளோம்.

வருகின்ற 8ஆம் தேதி மகளிர் தினத்தன்று சென்னையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மூவாயிரத்து 19 கோடி ரூபாய் கடன் இணைப்புகளை வழங்கவுள்ளார். இப்படி வழங்கப்படுகின்ற அந்த கடன்களை எந்த அளவுக்கு பயனுள்ள வகையில் செலவிடுகின்றார்கள்; அதன் மூலம் அவர்களுடைய வாழ்வாதாரம் எந்த அளவுக்கு மேம்பட்டுள்ளது என்பது குறித்து மாவட்ட ஊரியாக விவரங்களை பெற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எங்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார். மாவட்ட வாரியாக செல்கின்றபோது, ஒவ்வொரு நிகழ்ச்சியாக நடத்தும்போது, ஆயிரக்கணக்கான மகளிர் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த சகோதரிகள் வருகிறார்கள், வங்கி இணைப்புக் கடன்கள் கோடிக்கணக்கில் வழங்குகிறோம். ஆனால் இனிமேல் ஒவ்வொரு மாவட்டத்திற்கு, கிராமத்திற்கு, ஊராட்சிக்கு செல்லும்போது அங்கு செயல்படக்கூடிய சுயஉதவிக் குழுவில் உள்ள சகோதரிகளை அழைத்து, அவர்கள் என்னென் எதிர்பார்க்கிறார்கள், என்னென்ன திறன் பயிற்சி எதிர்பார்க்கிறார்கள்; என்னென்ன வசதிகள் கேட்கிறார்கள் என ஆய்வு செய்ய உள்ளோம்.

மேலும் செயல்பட்டுக் கொண்டிருந்த மகளிர் சுயஉதவிக் குழுக்கள் ஏன் செயல்படாமல் உள்ளது. அந்த குழுக்களை எல்லாம் எவ்வாறு செயல்படுத்துவது. அவர்களை எப்படி ஊக்குவிப்பது; அவர்களுடைய பிரச்சனைகள் என்னவென்று கேட்கச் சொன்னார். அதனுடைய ஒரு முன்னோட்டமாக தான் இன்றைக்கு முதன்முறையாக ஊராட்சி அளவில் இயங்கக்கூடிய குழுக்களை ஆய்வு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் பணியை திருவாரூரில் இருந்து துவங்கியிருக்கின்றோம். இந்த குழுக்களை துவக்கிய கலைஞரின் சொந்த ஊரில் இருந்து ஆய்வைத் துவங்கியதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி, பெருமை” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்