Skip to main content

ஜெ.பி.நட்டாவின் கான்வாய் மீது தாக்குதல் - பாஜக மீது சந்தேகம் எழுப்பும் அமைச்சர்!

Published on 11/12/2020 | Edited on 11/12/2020
subratha mukharjee

 

2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழகம், மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு பல்வேறு மாநிலங்களுக்குப் புதிய பொறுப்பாளர்களை அண்மையில் பாஜக நியமித்தது. இதனைத்தொடர்ந்து, பாஜக தலைவர் நட்டா தேர்தல் நடக்கும் மாநிலங்களில் பாஜகவை வலுப்படுத்தும் நோக்கில், 120 நாட்கள் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்தவாரம் உத்தரகாண்ட் மாநிலத்திலிருந்து அவர் தனது பயணத்தைத் தொடங்கினார்.  

 

இந்தப் பயணத்தின் ஒருபகுதியாக இன்று மேற்குவங்கத்தின் டயமண்ட் ஹார்பர் பகுதிக்கு அவர் சென்றார். அப்போது நட்டாவின் கான்வாயில் வந்த பாதுகாப்பு வாகனங்கள் மீது கற்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், பல கார்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. இந்த தாக்குதலில் பாஜக தலைவர்கள் சிலரும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இந்தத் தாக்குதல் குறித்து, மேற்கு வங்காள அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம், அறிக்கை கேட்டுள்ளது. இந்தநிலையில், மேற்கு வங்காள அமைச்சர் சுப்ரதா முகர்ஜீ, இந்த ஜேபி. நட்டா மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதல், முதல்வர் மம்தாவின் பத்து வருட சாதனைப் பட்டியலை வெளியிடும் நிகழ்வில் இருந்து மக்களை திசை திருப்ப நடத்தப்பட்டதா என சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.

 

இதுத்தொடர்பாக அவர், "ஜேபி நட்டா, தான் தாக்கப்பட்டதாக கூறுகிறார். ஆனால் அதற்கான தூண்டுதல் அவரிடமும், அவரது கட்சி தொண்டர்களிடமிருந்து வந்ததாக எங்களிடம் தகவல் உள்ளது. இந்த மொத்த எப்பிசோடையும், பாஜக திட்டமிட்டு செய்ததா என்பதை கண்டுபிடிக்க வேண்டியது அவசியம்" என கூறினார். மேலும், "இன்று நடந்ததாக கூறப்படும் தாக்குதல், மம்தா பானர்ஜியின் சாதனைகளை சொல்லும் நிகழ்ச்சியில் இருந்து கவனத்தை திசை திருப்ப நடத்தப்பட்டதா" எனவும் கேள்வியெழுப்பியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்