Skip to main content

மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்பு!

Published on 24/12/2024 | Edited on 24/12/2024

 

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, 4  நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் (22.12.2024) டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். இதன் ஒரு பகுதியாக அவர், பிரதமர் மோடியை இன்று (24.12.2024) காலை சந்தித்துப் பேசினார். அப்போது பல்வேறு விசயங்கள் குறித்து விவாதித்தாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து  இன்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசியுள்ளார். இது தொடர்பாக ராஜ்பவன் சார்பில் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆளுநர் ஆர்.என்.ரவி, பிரதமர்  நரேந்திர மோடியைச் சந்தித்து பயனுள்ள ஆலோசனை மேற்கொண்டார். மாநில மக்கள், தமிழ் மொழி, இலக்கியம் மீது அளவற்ற அன்பு செலுத்தும் நரேந்திர மோடிக்குத் தமிழ்நாட்டு மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மேலும் ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து மாநிலம் தொடர்புடைய தேசியப் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து விளக்கினார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையின் அடுத்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 6ஆம் தேதி (06.01.2024) காலை 09.30 மணிக்குத் தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்ற உள்ளார். இத்தகைய சூழலில் ஆளுநர் ஆர்.என். ரவியின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

அதே சமயம் கேரளா, பீகார், ஒடிசா, மணிப்பூர், மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு புதியதாக ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான உத்தரவைக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ளார். அதன்படி ஒடிசா ஆளுநர் ரகுபர் தாஸ் ராஜினாமாவைக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டுள்ளார். மிசோரம் ஆளுநராக உள்ள ஹரிபாபு, ஒடிசாவின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ராணுவ தளபதி வி.கே. சிங், மிசோரம் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் பீகாருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதே போன்று பீகார் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் கேரளாவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மணிப்பூர் ஆளுநராக முன்னாள் மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா நியமிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்