Skip to main content

கல்வித் திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்த மத்திய அரசு; புதுச்சேரியின் நிலைப்பாடு என்ன?

Published on 24/12/2024 | Edited on 24/12/2024
Puducherry minister explanation  Compulsory pass system for 5th and 8th classes

இந்திய அரசியலமைப்பின் 86வது திருத்தச் சட்டம் 2002, இந்திய அரசியலமைப்பில் 21 -ஏ புதிய பிரிவைச் சேர்த்தது. அதன்படி, 6 வயது முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வியை அரசு சட்டப்பூர்வமாக வழங்கப்பட்ட அடிப்படை உரிமையாக உத்தரவாதம் அளித்துள்ளது. இத்தகைய சூழலில் தான் கல்வி உரிமைச் சட்டத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு திருத்தப்பட்டது. இதன் மூலம் மத்திய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பயிலும் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயத் தேர்ச்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இவ்வாறு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் கட்டாயம் தேர்ச்சி என்ற முறையால் கல்வியின் தரம் குறைகிறது என விமர்சனங்களும் எழுந்தன. இத்தகைய சூழலில் தான், கட்டாயத் தேர்ச்சி கொள்கையில் மீண்டும் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதன்படி ஐந்தாம் வகுப்பிலும், எட்டாம் வகுப்பிலும் இறுதி ஆண்டு தேர்வு எழுதி மாணவ மாணவிகள் அந்த தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெறவில்லையெனில், 2 மாதங்கள் கழித்து மீண்டும் இந்த தேர்வை எழுத வாய்ப்பு அளிக்க வேண்டும். அதன்படி 2வது தேர்விலும் அந்த மாணவர் தேர்ச்சி பெறவிட்டால் அவர் அதே வகுப்பை மீண்டும் தொடர வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பில் கட்டாய தேர்ச்சி என்ற முறையை ரத்து செய்துள்ளது.

கட்டாய தேர்ச்சி கொள்கையினால், தமிழ்நாடுப் பள்ளிகளின் தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் கிடையாது என்ற தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று தெரிவித்தார். தமிழ்நாட்டில், மாநிலக் கல்விக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும் சூழ்நிலையில், மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகள் எதுவும் தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் மத்திய அரசுப் பள்ளிகளைத் தவிர பிற பள்ளிகளுக்குப் பொருந்தாது எனவும் அவர் உறுதியாக தெரிவித்தார். 

இந்த நிலையில், கல்வி உரிமைச் சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்களால் புதுச்சேரிக்கு என்ன மாற்றம் ஏற்படும் என்று புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “தமிழகத்தை பொறுத்தவரை தனி கல்வி வாரியம், தனி கல்வி திட்டம் அனைத்தும் அங்கு இருக்கிறது. அது அந்தந்த மாநிலத்தினுடைய கொள்கை முடிவு. புதுச்சேரி அரசை பொறுத்தவரை அனைத்தையும், சிபிஎஸ்சி பாடத்திட்டமாக மாற்றி இருக்கிறோம். மத்திய அரசின் கல்வி திட்டத்தின் கீழ் தான் புதுச்சேரி கல்வி திட்டமாக இருந்துகொண்டு வருகிறது.  

அதனால், மத்திய கல்வி திட்டத்தில் என்ன மாற்றம் கொண்டு வந்தாலும், அது புதுச்சேரி மாநிலத்திற்கும் பொருந்தும். எனவே, அதனை ஏற்று புதுச்சேரி மாநிலம் அதை செயல்படுத்தும். மத்திய அரசு வெளியிட்ட சுற்றறிக்கையில் என்ன சொல்லி இருக்கிறதோ, அந்த நடைமுறையை புதுவை மாநில கல்வி துறை பின்பற்றும். மாணவர்களுடைய கல்வி தரத்தையும், சிறந்த கல்வியாளராகவும் உருவாக்க வேண்டும் என்பது தான் மத்திய அரசின் நோக்கம். அதனால், புதுச்சேரியில் 5,8ஆம் வகுப்புகளுக்கு கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்படும்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்