இந்தியாவில் கரோனா வைரஸுக்கான தடுப்பூசி வரும் செப்டம்பர் மாதம் முதல் விற்பனைக்கு வரலாம் எனவும், அதன் விலை சுமார் 1,000 ரூபாய் இருக்கும் எனவும் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.13 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில், இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 2.18 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை இந்த வைரசால் 31,332 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதனால் 1,007 பேர் உயிரிழந்துள்ளனர், 7,696 பேர் இதிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்நிலையில் இந்த நோய்க்கான தடுப்பு மருந்துகள் கண்டறியும் பணியில் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை சுமார் ஆறுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன.
இதில் புனேவில் செயல்படும் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகளுடன் இணைந்து கரோனாவுக்கான தடுப்பூசியைத் தயாரிக்க முயன்று வருகிறது. இந்நிலையில் இந்தத் தடுப்பூசி ஆராய்ச்சிப் பணிகள் குறித்து பேசியுள்ள இந்நிறுவனத்தின் தலைவர் ஆதார் பூனவல்லா, "மே மாத இறுதிக்குள் நாங்கள் கரோனா தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கி விடுவோம். செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் இதன் தயாரிப்பு பணிகள் முடிவடையும். உலகம் முழுவதற்கும் கொடுக்கக்கூடிய அளவு நம்மால் உற்பத்தி செய்யமுடியும்.
இந்தத் தடுப்பூசியைக் கண்டறிய நீண்ட காலம் எடுக்கும் எனக் கருதினோம், ஆனால் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகளுடன் கூட்டணி வாய்த்த பிறகு, இந்த வேலை சற்று சுலபமாகியுள்ளது. அவர்களிடம் இருந்து நிறையத் தகவல்களைத் தெரிந்துகொண்டுள்ளோம். சுமார் ரூ.1,000 விலையில் சந்தையில் தடுப்பூசி கிடைக்கும். இதுகுறித்த துல்லியமான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.