நாட்டின் 17-வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதிவரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 126-வது பிரிவின்படி, வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேர காலகட்டத்தில் எந்த வடிவத்திலும் தேர்தல் பிரச்சாரம் செய்யக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வாக்குப் பதிவுக்கு முன்னர் 48 மணி நேரத்திற்கு எவ்வித தேர்தல் பிரச்சாரமும் சமூக வலைதளத்தில் அனுமதிக்கப்படமாட்டாது என ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூகவலைதள நிறுவனங்கள் தானாக முன்வந்து அறிவித்துள்ளன.
இந்திய இணையதளம் மற்றும் செல்ஃபோன் கூட்டமைப்பும், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், ட்விட்டர், கூகுள், ஷேர்சாட், டிக்டாக் உள்ளிட்ட சமூகவலைதளங்களின் அதிகாரிகளும் இணைந்து நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், ட்விட்டர், கூகுள், ஷேர்சாட், டிக்டாக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பிரச்சாரம் நடைபெறுவதாக புகார் தெரிவிக்கப்பட்டால், சின்கா குழு பரிந்துரைகளின்படி 3 மணி நேரத்தில் நீக்கப்படும் என்று சமூகவலைதளங்கள் உறுதியளித்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.