Skip to main content

விரக்தியின் விளிம்பில் பாகிஸ்தான்; பிரதமர் குறித்த விமர்சனத்திற்கு இந்தியா கடும் கண்டனம் 

Published on 16/12/2022 | Edited on 16/12/2022

 

India strongly condemns Pakistan minister for criticising PM Modi

 

ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனைக் கூட்டம் அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் காஷ்மீர் தொடர்பாக ஆரம்பம் முதலே இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே காரசாரமாக விவாதங்கள் தொடர்ந்து வருகிறது. நேற்று இந்தக் கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி காஷ்மீர் தொடர்பாக ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இந்தியா நிறைவேற்ற வேண்டும் எனக் கூறி, காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுகிறது எனக் குற்றஞ்சாட்டினார்.

 

இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள், அண்டை நாட்டின் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களெல்லாம் மனித உரிமை மீறல்களைப் பற்றிப் பேசலாமா” எனப் பதிலடி கொடுத்தார். இது தொடர்பாகப் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, “பின்லேடன் இறந்துவிட்டார். ஆனால், குஜராத்தின் கசாப்பு கடைக்காரர் வாழ்கிறார் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். அவர் இந்தியாவின் பிரதமராக இருக்கிறார். அவர் அமெரிக்காவிற்குள் நுழையக்கூடாது எனத் தடை விதிக்கப்பட்டிருந்தது" என்று பிரதமர் மோடியைக் குறிப்பிட்டுப் பேசியிருந்தார். 

 

மேலும், ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் கொண்ட அவர்கள் காந்தியைக் கொன்றவரை ஹீரோவாக வணங்குகிறார்கள் என்றும், குஜராத் மற்றும் காஷ்மீரில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவால் பயங்கரவாதம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பேசியதாகச் சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ பேசியதற்குக் கண்டனம் தெரிவித்து, டெல்லியில் உள்ள அந்நாட்டுத் தூதரகம் அருகே பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் போராட்டம் நடத்தியது. 

 

இந்நிலையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரின் பேச்சுக்கு இந்தியா கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாகப் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, "பயங்கரவாதத்தைத் தனது அரசின் கொள்கையாகக் கொண்டிருக்கும் நாட்டைச் சேர்ந்த  பிலாவல் பூட்டோ சர்தாரியின் பேச்சு, பயங்கரவாதிகளுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும்.  ஒசாமா பின்லேடனை தியாகி எனப் புகழ்ந்த நாடு பாகிஸ்தான். லக்வி, ஹபீஸ் சையத், மசூத் அசார், தாவூத் இப்ராஹிம் என ஐ.நா.வால் பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்ட 126 பேருக்கு அடைக்கலம் கொடுத்துள்ள நாடு பாகிஸ்தான்.  ஐ.நா.வால் தடை விதிக்கப்பட்ட 27 பயங்கரவாத அமைப்புகளைச் செயல்பட அனுமதித்திருக்கும் நாடு பாகிஸ்தான்" எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்