
சேலம் மாவட்டம் ஓமலூரில் பேக்கரியில் வாங்கிய குளிர்பானத்தில் பல்லி மற்றும் அரணை அழுகிய நிலையில் மிதந்ததாக குற்றச்சாட்டு எழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ளது செம்மாண்டப்பட்டி கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவர் ஓமலூர்-தர்மபுரி சாலையில் உள்ள 'சென்னை கேக்ஸ்' என்ற கடையில் 'ஸ்வீட் பீர்' எனும் குளிர்பான பாட்டில்கள் நான்கை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்த குழந்தைகள் குளிர்பானத்தை குடித்தவுடன் வெளியே துப்பியுள்ளனர். உள்ளே பார்த்த பொழுது அதில் அரணை, பல்லி ஆகியவை அழுகிய நிலையில் கிடந்தது தெரிந்து அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக குளிர்பான பாட்டிலில் உள்ள சேவை எண்ணுக்கு அழைத்தபோது அழைப்பை யாரும் எடுக்கவில்லை. இதனால் பாட்டிலோடு சம்பந்தப்பட்ட பேக்கரி கடைக்கு வந்த அவர், கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். குளிர்பானத்தை குடித்த சிறுமி வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தற்போது வீடு திரும்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஓமலூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.