
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலையில் அமைந்துள்ள ஆங்கிலேயர்களால் முதல் முதல் அறியப்பட்ட 500 ஆண்டுகள் பழமையான வெள்ளைகவி மலை கிராம மக்களுக்கு அவர்களின் அடிப்படை கோரிக்கைகள் அடுத்தடுத்து நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருப்பதால் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
வெள்ளைகவி கிராமத்திற்கு ரேஷன் கடை இல்லை என்பதை நிவர்த்தி செய்யும் விதமாக ரேஷன் பொருட்கள் குதிரைகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு அந்த மலை கிராமத்திற்கு நேரடி விநியோகம் செய்யப்பட்டது. வீடு தேடி வந்த ரேஷன் பொருள்களால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த கிராம மக்களின் அடுத்தடுத்த தேவைகளும் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வெள்ளைக் கவி ஊராட்சியில் உள்ள சின்னூர் என்ற மலை கிராமத்தில் வசிக்கும் 40 குடும்பங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் தங்களது ஆதார் கார்டு பெறுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டு இருப்பதாக பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமாரிடம் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து இணைய வசதி இல்லாத அடர்ந்த வனப்பகுதிகளில் வசிக்கும் அந்த மலை கிராம மக்களுக்கு ஆதார் கார்டு பெற்றுத் தரும் நோக்கில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு ஆதார் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்காக வெள்ளை கவி ஊராட்சியில் இருந்து 40க்கும் மேற்பட்ட பழங்குடியினர் மக்கள் சிறப்பு முகாமிற்கு அழைத்து வரப்பட்டனர். இந்த சிறப்பு முகாமில் வத்தலக்குண்டு திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் முருகன், பேரூராட்சி மன்ற தலைவர் சிதம்பரம் ஆகியோர் பங்கேற்று முகாமினை துவக்கி வைத்தனர் இந்த முகாமில் கொடைக்கானல் மற்றும் வத்தலக்குண்டு வருவாய்த் துறை அலுவலர்கள் பங்கேற்றனர் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆதார் அட்டை இல்லாமல் இருந்த பழங்குடியினர் மகிழ்ச்சியுடன் ஆதார் எடுத்துக் கொண்டனர்.
ஆதார் கார்டு பெறுவதன் மூலம் ரேஷன் கார்டு, ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட அரசின் திட்டங்கள் பெறுவதற்கு உதவியாக இருக்கும் எனவும் தங்களுக்கு இந்த சிறப்பு முகாம் ஏற்பாடுகளை செய்து கொடுத்த தமிழக அரசுக்கு மலை கிராம மக்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்!