
கோயம்பேடு-பட்டாபிராம் இடையிலான மெட்ரோ ரயில் திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு 9,928 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோயம்பேட்டில் இருந்து பட்டாபிராம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அறிக்கை கொடுக்கப்பட்டிருந்தது. பாடி, புதுநகர், முகப்பேர், அம்பத்தூர், திருமுல்லைவாயில், ஆவடி வழியாக பட்டாபிராம் வெளிவட்டச் சாலை வரை ஒட்டு மொத்தமாக 21.76 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய மெட்ரோ வழித்தடம் அமைப்பதற்கான திட்ட அறிக்கை தமிழ்நாடு சிறப்பு திட்டச் செயலாளக்க துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது.
19 உயர்த்தப்பட்ட மெட்ரோ ரயில் நிறுத்தங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு தற்பொழுது ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் பின்னர் மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளருக்கு அனுப்பப்பட்டு அதற்கான ஒப்புதல் பெறப்பட்டவுடன் ஆசிய வங்கியின் நிதி பங்களிப்புடன் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சென்னையில் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ சேவை பயன்பாட்டில்உள்ள நிலையில் மூன்று வழித்தடங்களில் மெட்ரோ திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கூடுதலாக கோயம்பேடு-பட்டாபிராம் இடையிலான புதிய மெட்ரோ திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.