மகாராஷ்டிராவில் கடந்த 2019 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், என்சிபி ஆதரவுடன் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தார். இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் சிவசேனா பிளவுபட்டு பாஜகவுடன் சேர்ந்து ஏக்நாத் ஷிண்டே ஆட்சியில் அமர்ந்தார். அவருடன் சென்ற 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி உத்தவ் தாக்ரே சார்பில் முறையிடப்பட்டது.
இந்த கோரிக்கை மீது சபாநாயகர் ராகுல் நார்வேகர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். சிவசேனா உச்சநீதிமன்றம் சென்ற நிலையில், சபாநாயகருக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும், தகுதி நீக்கம் குறித்து உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, 'ஒரு கட்சித் தலைவரின் விருப்பத்தை ஒரு கட்சியின் ஒட்டுமொத்த விருப்பமாக கருத முடியாது எனத் தெரிவித்துள்ள மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நார்வேகர், 'ஏக்நாத் ஷிண்டேதான் சிவசேனா கட்சியின் உண்மையான தலைவர். 2022 ஆம் ஆண்டு ஷிண்டேவின் ஆதரவு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது. ஷிண்டேவை சட்டமன்ற கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்க உத்தவ் தாக்கரேவிற்கு அதிகாரம் இல்லை' எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், உத்தவ் தாக்கரே தலைமையில் நேற்று (23-01-24) நாசிக் பகுதியில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் உத்தவ் தாக்கரே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “வானர மன்னன் வாலியை ராமர் ஏன் கொன்றார் என்பதை ஒருவர் புரிந்துகொள்ள வேண்டும். நமது சிவசேனாவை அபகரித்த வாலியையும் நாம் அரசியல் ரீதியாக கொல்ல வேண்டும். சிவசேனாவுடன் தப்பிச் சென்ற துரோகிகளை அரசியல் ரீதியாக படுகொலை செய்ய தொண்டர்களாகிய நீங்கள் சபதம் எடுக்க வேண்டும். சிவசேனாவை அபகரித்தவர்கள், காவிக் கொடியை காட்டி ஏமாற்றியவர்கள் மற்றும் அவர்களின் எஜமானர்கள் அனைவரையும் நிச்சயமாக அரசியல் ரீதியாகப் படுகொலை செய்வோம். ராமரின் முகமூடிகளை அணிந்த ராவணன் முகத்திரையை எங்களது கட்சித் தொண்டர்கள் கிழிப்பார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக வருவதற்காக சிவசேனா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தது. ஆனால், சிவசேனா தலைவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுகிறது. இந்த நிலையை அடைய உதவிய சிவசேனா தொண்டர்களை பிரதமர் மோடி மறந்துவிட்டார். கடந்த 70 ஆண்டுகளில் என்ன செய்தீர்கள் என்று காங்கிரஸை பார்த்து பா.ஜ.க.வினர் கேட்கின்றனர். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ.க என்ன செய்தது?
முதல் 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி உலகம் முழுவதும் சுற்றினார். அந்த ஐந்து ஆண்டுகளில் பிரதமர் அயோத்திக்கு ஒருமுறை கூட செல்லவில்லை. பா.ஜ.க.வின் மோசடிகளின் ஆதாரமாக இருக்கும் ‘பி.எம்.கேர்’ நிதி குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பா.ஜ.க.வுக்கு எதிராக விசாரணை நடத்தி அவர்களை சிறைக்கு அனுப்புவோம்” என்று கூறினார்.