மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் மேற்கொண்டுள்ள 'டெல்லி சலோ' என்ற மாபெரும் பேரணி பல தடைகளைக் கடந்து டெல்லி சென்றடைந்தது. டெல்லியின் புராரி பகுதியில் அமைந்துள்ள மைதானத்தில், அமைதியான முறையில் இந்தப் போராட்டத்தை மேற்கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இந்த மைதானத்திலும், டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளிலும் தொடர்ந்து விவசாயிகள் பெருமளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் குறித்து பேசிய கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “விவசாயிகளின் போராட்டம் குறித்து இந்தியாவிலிருந்து வரும் செய்திகளைக் கவனித்தேன். நாங்கள் அனைவரும் அங்கிருக்கும் எங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறோம். ஆனால், இதுதான் நிலவரம் என்ற உண்மை அனைவருக்கும் தெரியும். அமைதியான போராட்டக்காரர்களின் உரிமைகளைப் பாதுகாக்க கனடா எப்போதும் துணைநிற்கும் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். பேச்சுவார்த்தை மூலம் முடிவு காண்பதை நாங்கள் நம்புகிறோம். எங்கள் கவலைகளை எடுத்துரைக்கும் விதமாகப் பல வழிகளில் இந்திய அதிகாரிகளை அணுகியுள்ளோம். நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது” எனத் தெரிவித்திருந்தார்.
ஜஸ்டின் ட்ரூடோவின் இந்தப் பேச்சுக்கு ஏற்கனவே இந்தியா கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இந்தியாவிற்கான கனடா நாட்டுத் தூதரை அழைத்துக் கண்டித்துள்ளது, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்.
இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கனடா நாட்டுத் தூதரை அழைத்து, கனடா பிரதமரும், அந்நாட்டின் சில அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்திய விவசாயிகள் தொடர்பான பிரச்சனை குறித்து பேசியவை, ஏற்றுக் கொள்ளமுடியாத தலையீட்டை, நமது உள்நாட்டு விவகாரங்களில் ஏற்படுத்துகிறது. இதேபோல் தொடர்ந்து நடந்தால், அது இருநாடுக்கும் இடையேயான உறவில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும், இதுபோன்ற பேச்சுகள், கனடாவில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பு தீவிரமாகச் செயல்படும் எண்ணம் கொண்டவர்கள் கூடி நிற்பதை ஊக்கப்படுத்துகிறது. அது இந்தியத் தூதரகத்தின் பாதுகாப்பில் பிரச்சனையை ஏற்படுத்துகிறது எனவும் தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், கனடா அரசு, இந்தியத் தூதரகத்திற்கும், அங்குள்ள அதிகாரிகளுக்கும் முழுமையான பாதுகாப்பை வழங்குவதோடு, அந்நாட்டு அரசியல் தலைவர்களை, தீவிரவாதச் செயல்களைச் சட்டப்பூர்வமானது எனக் கூறுவதிலிருந்து தடுக்கும் என எதிர்பார்ப்பதாக கனடா நாட்டுத் தூதரிடம் தெரிவித்ததாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.