
தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி, நாடாளுமன்றத்தில் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா பெரும்பான்மை வாக்கெடுப்பின் அடிப்படையில் நிறைவேறியது. அதனை தொடர்ந்து, இந்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்ததை அடுத்து, வக்ஃப் வாரிய புதிய சட்டம் நேற்று (08-04-25) நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடுத்துள்ளது. அதே சமயம், இந்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியில் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக நேற்று (08-04-25) போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை தடுத்து காவல்துறையினருக்கும், போராட்டாக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அங்கு வன்முறை வெடித்தது. போலீஸ் வாகனம் உள்பட பல வாகனங்கள் மீது தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டது, கற்கள் வீசப்பட்டது. இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வந்தது.
இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் வக்ஃப் வாரிய சட்டம் நிறைவேற்றப்படாது என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஜெயின் சமூகத்தால், விஷ்வ நவ்கர் மகாமந்த்ரா திவாஸ் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது, “நான் ஏன் அனைத்து மத விழாக்களிலும் பங்கேற்கிறேன் என சில பேர் கேட்கிறார்கள். என் வாழ்நாள் முழுவதும் இதை தொடர்ந்து செய்வேன் என்று நான் கூறினேன். நீங்கள் என்னை சுட்டுக் கொன்றாலும், ஒற்றுமையில் இருந்து என்னை பிரிக்க முடியாது. மேற்கு வங்கத்தில் எந்த பிரிவினையும் இருக்கக் கூடாது. வாழு, வாழ விடு...
வக்ஃப் வாரிய சட்டம் நிறைவேற்றப்பட்டதால் நீங்கள் வருத்தப்பட்டிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். நம்பிக்கையோடு இருங்கள். மேற்கு வங்கத்தில் பிரித்தாளும் ஆட்சி எப்போதும் நடக்காது. வங்காளத்தேசத்தைப் பாருங்கள், வக்ஃப் வாரிய சட்டம் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. என்னுடைய சொத்துக்களை என்னிடம் இருந்து எடுத்துச் செல்ல யாருக்கு உரிமை இல்லாத போது, வேறொருவரின் சொத்துக்களை எப்படி எடுத்துச் செல்ல சொல்வேன். நாம் 30% முஸ்லிம்களை அழைத்துச் செல்ல வேண்டும். நினைவில் கொள்ளுங்கள், உங்கள் சொத்துக்களை உங்கள் சகோதரியாகிய நான் பாதுகாப்பேன். வக்ஃப் வாரிய சட்டம், மேற்கு வங்கத்தில் அமல்படுத்தப்படமாட்டாது.
நான் இந்துக்களை பாதுகாக்கவில்லை என்று பா.ஜ.கவினர் சொல்கிறார்கள். பிறகு, யார் பாதுகாக்கிறார்கள்?. நான் எந்த நிகழ்ச்சியை தடுத்தேன் என்று நீங்கள் சொல்லுங்கள். ஒவ்வொரு மாநிலத்திற்கும் மொழி, உணவு கடைபிடிப்பு, கலாச்சாரம் ஆகியவை உள்ளது. நாங்கள் அனைத்து பாரம்பரியத்தின் மீது மரியாதையோடு இருக்கிறோம். அனைத்து மொழிகளையும் கற்கவும், கற்பிக்கவும் செய்கிறோம். தென்மாநில மொழிகளைத் தவிர, எனக்கு அனைத்து மொழிகளும் புரியும்” என்று தெரிவித்தார்.