
கோயிலுக்கு அருகே உள்ள சந்தையில் மீன் விற்பனை செய்தவர்களிடம் மீன் விற்கக் கூடாது என்று ஒருவர் வாக்குவாதம் நடத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி தலைநகரில் சித்தரஞ்சன் பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்காவில் உள்ள சந்தையில் காய்கறிகள், பழங்கள், மீன்கள் ஆகிய கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளுக்கு அடுத்ததாக பழமையான காளி கோயில் ஒன்று உள்ளது. இந்த நிலையில், காளி கோயிலுக்கு அருகில் மீன் விற்பனை செய்யக் கூடாது என்று ஒரு நபர் மீன் விற்பனையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், காவி நிற சட்டை அணிந்திருந்த ஒரு நபர் அங்கிருக்கும் மீன் விற்பனையாளர்களிடம், ‘இது சரி கிடையாது. கோயிலைச் சுற்றி தூய்மையாக இருக்க வேண்டும். ஆனால், இது தவறு. சனாதானர்களின் உணர்வுகளை இது புண்படுத்துகிறது. நாம் யாரையும் கொல்லக் கூடாது என்று சனாதன தர்மம் சொல்கிறது. கடவுள் தேவிக்கு இறைச்சி பரிமாறுவது என்பது கற்பனையான விஷயம். இந்து மத நூல்களில் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. சிலர் இதை நம்புகிறார்கள். ஆனால், இந்த கோயிலுக்கு அருகில் நடப்பது எங்களைப் போன்ற சனாதனர்களின் உணர்வுகளைப் புண்படுத்துகிறது’ என்று கூறினார். இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்தரா பா.ஜ.கவுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்தார்.
அதில் மஹுவா மொய்த்ரா கூறியதாவது, “பட்டப்பகலில் முழு துணிச்சலுடன் பா.ஜ.கவின் குண்டர்கள் கடைக்காரர்களை மிரட்டுகிறார்கள். குறிப்பிட்ட அந்த கோயில், தற்போது குறிவைக்கப்பட்ட மீன் விற்பனையாளர்களால் கட்டப்பட்டது. அவர்கள் அங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். பெரிய பூஜைகள் அங்கு நடத்தப்படுகின்றன. 60 ஆண்டுகளில் இது ஒருபோதும் நடந்ததில்லை என்று குடியிருப்பாளர்கள் கூறுகிறார்கள். இது டெல்லியில் பாஜக அரசாங்கத்தின் மூன்று மாதங்கள். நல்ல ஆண்டு நிறைவு பரிசு. நாங்கள் என்ன சாப்பிடப் போகிறோம், எங்கள் கடைகள் எங்கே இருக்க வேண்டும் என்று பாஜக சொல்லப் போகிறதா? ஒரு நாளைக்கு மூன்று முறை ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்ல வேண்டும் என்று பாஜக சொல்லப் போகிறதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.