Skip to main content

மத்திய அரசைக் கண்டித்து தி.மு.க. எம்.பி.க்கள் வெளிநடப்பு!

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
DMK MPs walk out to condemn the central government

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான கடந்த ஜனவரி 31 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இதனையடுத்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1 ஆம் தேதி மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார்.

அதே சமயம் இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் எனக் கூறப்பட்ட நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் நாடாளுமன்ற அமர்வு முக்கிய காரணங்களுக்காக மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதன்படி பிப்ரவரி 10 ஆம் தேதி, சனிக்கிழமையான இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது. இத்தகைய சூழலில் மக்களவையில், தமிழக மீனவர்கள் நலனில் மத்திய அரசு அக்கறை செலுத்தவில்லை என குற்றம் சாட்டியதுடன், தமிழக மீனவர்கள் கைது சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு மத்திய அரசு இன்னும் பதிலளிக்கவில்லை என தி.மு.க. எம்.பி.க்கள் குற்றம் சாட்டினர்.

இது குறித்து விவாதிக்க நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர் குழு தலைவர் டி.ஆர். பாலு எம்.பி. ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என்றார். அதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா மறுப்பு தெரிவித்ததால் மக்களவையில் இருந்து தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருந்தனர். இந்நிலையில் தமிழகத்திற்கு வெள்ள நிவாரணம் அளிக்காத மத்திய அரசைக் கண்டித்து மாநிலங்களவையில் இருந்து தி.மு.க. எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். இதன் மூலம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று இரு அவைகளிலும் இருந்து தி.மு.க உறுப்பினரகள் வெளிநடப்பு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்