
நாடு முழுவதும் நேற்று (07-04-25) ராம நவமி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
அந்த வகையில், உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகர் முழுவதும் ராம நவமியை கொண்டாடும் பொருட்டு பல பேரணிகள் நடத்தப்பட்டது. இதில், மகாராஹா சுஹேல்தேவ் சம்மன் சுரஷா மஞ்ச் என்ற இந்துத்துவா அமைப்பினர் சிலர், சிக்கந்த்ரா பகுதியில் காவிக் கொடிகளை ஏந்திக் கொண்டு ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்டவாறு பேரணியாக சென்றனர்.
அப்போது அந்த அமைப்பினரைச் சேர்ந்த சிலர், அங்குள்ள சையத் சலார் ஹாஜி தர்ஹா மீது ஏறி காவிக் கொடிகளை அசைத்துக் கொண்டிருந்தனர். மேலும் அவர்கள், ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்டு கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மசூதியில் இருந்த அந்த நபர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் குறித்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.