
கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில், தனியார் பள்ளியில் நடக்கவிருந்த நாடகத்தில் நடிக்க ஒத்திகை பார்த்த சிறுவன், வீட்டில் எதிர்பாராத விதமாகத் தூக்குக் கயிற்றில் தொங்கி உயிர்விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகராஜ், பாக்யலட்சுமி தம்பதியின் மகன் சஞ்சய். 12 வயதான இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். கர்நாடக மாநிலத்தில் கர்நாடக உதய தினம் கொண்டாடப்படுவது வழக்கம். சஞ்சய் படித்த பள்ளியில் உதய தினத்தை முன்னிட்டு நடக்கவிருந்த நாடக நிகழ்ச்சியில் பகத்சிங் வேடம் அணிந்து நடிக்க இருந்தார்.
இதற்காக வீட்டில் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளார். பகத்சிங்கை தூக்கிலிடும் காட்சியில் ஒத்திகை பார்த்து நடிப்பதற்காகக் கழுத்தில் கயிற்றைக் கட்டி எதிர்பாராத விதமாகக் கயிறு கழுத்தை இறுக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
வீட்டிற்குப் பெற்றோர் வந்ததும் தனது மகனின் நிலையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.